மோடி பிரதமரான பிறகு நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு! மலைக்க வைக்கும் கவுதம் அதானி சொத்து மதிப்பு!

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மும்மடங்கு உயர்ந்துள்ளதாக, தெரியவருகிறது.


மத்தியில் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்றதை தொடர்ந்து, அவரது நீண்ட கால நண்பரான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானிக்கு நிறைய சலுகைகள், மத்திய அரசு தரப்பில் செய்து தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் புதுப்புது தொழில் பணிகளை தொடங்கி வருகிறார். இந்நிலையில், Hurun Rich List என்ற ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில், 2014 முதல் 2019 வரையான காலக்கட்டத்தில் கவுதம் அதானியின் நிகர மதிப்பு ரூ.94,500 கோடியாக உள்ளதென்றும், இது கடந்த 4 ஆண்டுகளில் 2.48 மடங்கு வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தற்போது கவுதம் அதானி, 167வது பணக்காரராக உள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், வெறும் ரூ.5,00,000 முதலீட்டில் அதானி முதன்முதலாக,தொழில் தொடங்கினார். ஆனால், அவரது நிறுவனத்தின் தற்போதைய வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த 2002 முதல் 2012 வரையான காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் வருமானம் 16 மடங்கு வளர்ச்சியை எட்டியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.