நாளைக்கு தயாரா இருங்க! தீபாவளி பஸ்க்கு முன்பதிவு தொடங்குதுங்கோ!

தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து சார்பில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பண்டிகை தினம் என்றால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களுக்கு முதல் செலவு முன்பதிவுக்கான டிக்கெட்தான். பொருளாதாரத்தில் முன்னேறிய மக்கள் விமானத்தில் சென்றுவிடுவர்.

அடுத்தபடியாக இருப்பது ரயில் போக்குவரத்து பொதுவாகவே தீபாவளிக்கென அறிவிக்கப்படும் ரயில்களில் டிக்கெட் அறிமுகமான சற்று நேரத்தில் விற்று தீர்ந்துவிடும். இந்த முறை தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.

அதற்கடுத்தபடியாக இருப்பது அரசுப் பேருந்து, ஆம்னிப் பேருந்து மற்றும் தனியார் டிராவல்ஸ் நிறுவனங்கள்தான். இவைகளில் செல்ல முதலில் பயமுறுத்தவது கட்டணப் பிரச்சனைதான்.

ஆம்னிப் பேருந்துகளை பொறுத்தவரை அவர்கள் சொல்வதுதான் டிக்கெட் விலை. ஆம்னிப் பேருந்துகள் மீது அடிக்கடி புகார் வருவதால்தான் அதிக அளவில் தமிழக அரசு பயணிகளின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. 

அந்த வகையில் வருகிற அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகள் அக்டோபர் 25ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (27.8.2016) தொடங்குகிறது.

சென்னையில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் அரசு 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. வெளியூர் செல்பவர்கள் www.tnstc.in இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கலாம் என்ற தகவல் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் அடுத்து வரும் 2 வாரங்களில் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும்.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தபோது போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதனை குறைக்கும் வகையில், திட்டமிட்டு பேருந்துகளை தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் கே.கே.நகர் சைதாப்பேட்டை, திருவான்மியூரில் இருந்து சில பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் புறநகரில் வசிப்பவர்கள் கோயம்பேடு வரை வராமல் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பேருந்தில் ஏறிச் செல்லும் வகையில் முன்பதிவில் குறிப்பிட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது போக்குவரத்துக் கழகம்.

இதில் வருத்தம் யாருக்கு என்றால் சொந்த ஊரில் பிறந்து சொந்த ஊரிலேயே வேலை செய்பவர்களுக்குத்தான். உடன் பணிபுரியும் ஊழியர்கள் ஊருக்கு சென்றுவிட தங்களுக்கு விடுமுறை இல்லாமல் அவர்களின் பணியையும் சேர்த்து அலுவலகத்தில் செய்யவேண்டிய சூழ்நிலை வரும்.

தீபாவளி அன்று விடுமுறைதானே என்று கேட்காதீர்கள். பண்டிகைகளின்போது விடுமுறையை அனுபவிப்பது பாதிக்குப் பாதி பேர் கூட இல்லை. பேருந்து, தீயணைப்பு, மருத்துவம், ஊடகம், அரசு இயந்திரம் என 65 சதவீதம் பேர் வேலை பார்த்துதான் ஆகவேண்டும்.