பெங்களூரு புகழேந்தியும் அவுட்டா? தினகரன் டீம் தில்லாலங்கடி!

எப்போது அ.ம.மு.க. என்று தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று தினகரன் முடிவு எடுத்தாரோ, அப்போதே அவருடன் இருந்த அத்தனை நிர்வாகிகளுக்கும் வயிற்றைக் கலக்கிவிட்டது.


என்றாவது ஒரு நாள் அ.தி.மு.க.வுடன் இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையை அடித்து துவைத்துப் போட்டார் தினகரன். ஆனால், யாருடைய கருத்தையும் கண்டுகொள்ளாமல் முழுக்க முழுக்க தன்னிஷ்டப்படியே கட்சியை நடத்தவே, வரிசையாக ஒவ்வொரு விக்கெட்டாக விழுந்தன. இப்போது தினகரன் டீமில் இருந்து பெங்களூரு புகழேந்தியும் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இதற்கு காரணம், அ.ம.மு.க. ஐ.டி. டீமில் இருந்து வெளியான ஒரு வீடியோதான். கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு ஹோட்டல் ரூமில் புகழேந்தி பேசுவதை வெளியிட்டுள்ளார்கள். அவர்களிடம் மிகவும் கேஷ்வலாகப் பேசுகிறார் புகழேந்தி. ‘நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.

போற இடத்திலேயோ, இருக்கிற இடத்திலேயோ நமக்கு முகாந்திரம் இல்லாம இனிமே இருக்க கூடாது. கரெக்டான பியூச்சரையும், பொசிசனையும் சரிபண்ணிட்டுதான் போகணும். அந்த ஐடியாவோடதான் உக்காந்துட்டு இருக்கிறேன் நான். அந்த பட்டியல்ல சேர்த்து ரெடி பண்ணி வைக்கிறேன். இங்கேயும் யார்கிட்டேயும் போய் நிக்குறதுக்கு எனக்கு இஷ்டமில்லை.

அட்ரஸ் இல்லாம, பதினாலு வருஷம் வெளியில இருந்த தினகரனை ஊருக்கு காண்பிச்சது நான்தான். கொண்டு வந்து போராட்டம் அது இதுன்னு பண்ணி தூக்கிவிட்டோம். அம்மா சாவு அப்ப கூட இவர் ஸீன்ல கிடையாது, உண்மையைதான் சொல்றேன்...’’ என்கிறார். இந்த வீடியோ வெளியே வந்ததில் இருந்து புகழேந்தியை பிடிக்க முடியவில்லை.

அவருக்கு அ.தி.மு.க.வில் சேர்வதா அல்லது பா.ஜ.க.வில் சேர்வதா என்று குழப்பம் இருந்த வேளையில், இப்படி தனக்குத் தெரிந்தவர்களே வீடியோ எடுப்பார்கள் என்பதையும், அதை ஐ.டி டீம் வெளியிடும் என்பதையும் நம்பவே முடியாமல் தவிக்கிறார். ஆக, தங்கதமிழ்செல்வன் பாணியில் முடிவு எடுக்கத் தள்ளப்பட்டிருக்கிறார் புகழேந்தி. அவர் முடிவு எடுக்கவில்லை என்றால் தினகரனே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவாராம்.