பெங்களூரில் தமிழ் பாட்டு பாடியவர்கள் மீது கொடூர தாக்குதல்! அச்சத்தில் தமிழர்கள்.

பெங்களூருவில் பிற மொழி பேசுவோர் மீது தாக்குதல் நடத்துவது மீண்டும் அதிகரிதிருக்கிறது.


பெங்களூர் கனர்ஷியல் ஸ்ட்ரீட் பகுதியில் 'சதுர்மாஸ்ய' விழாவுக்காக இந்தியில் பேனர்  கட்டிய ஜெயின் இனத்தவர்கள்  தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே தினத்தில் பெங்களூரு ஜெகஜீவன் ராம் நகர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மார்கண்டேயா நகரிலும் இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த முறை தாக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இங்குள்ள கங்கம்மா தேவி கோவில் திருவிழாவை முன்னிட்டு மெல்லிசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதில் தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. அதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து கச்சேரி நடக்கவே எதிர்ப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட கன்னட இயக்கத்துக்கு தகவல் தந்தனர். அதைத் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று மேடையில் ஏறி அங்கிருந்த இசைக் கருவிகளை உடைதனர், பாடகர்களும் தாக்கப்பட்டனர்.

இதற்கு உள்ளூர் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் உரிமையைத் தட்டிப் பறிக்கும் செயல் என்று குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவிடம் ,பெங்களூரு தமிழ்சங்க நிர்வாகிகள், மார்கண்டேய நகர் கங்கம்மா தேவி கோவில் ஏற்பாட்டாளர்கள் புகாரளித்தனர். இது தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.