100 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொடுத்த ஏடிஎம்..! மக்கள் கூட்டம் அலைமோதியதால் அதிர்ச்சி!

பெங்களூரு: 500 ரூபாய் நோட்டுகளை வாரி வழங்கிய ஏடிஎம் இயந்திரத்தை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கர்நாடகா மாநிலம் கொடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகரில் கனரா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை 100 ரூபாய் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு 500 ரூபாய் வந்துள்ளது. இதனை பார்த்து வியப்படைந்த அவர், மீண்டும் ஒருமுறை ஏடிஎம் கார்டை சொருகி, 100 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார்.

அப்போதும் அவருக்கு 500 ரூபாய் நோட்டு கிடைத்திருக்கிறது. இந்த தகவலை தனக்கு தெரிந்தவர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.   உடனே இது காட்டுத்தீயாகப் பரவ, மக்கள் கூட்டம் அந்த இயந்திரத்திற்கு படையெடுத்தனர். ஒவ்வொருவரும் 100 ரூபாய் எடுக்க, ஏடிஎம் இயந்திரம் தவறுதலாக எல்லோருக்கும் 500 ரூபாய் எடுத்துக் கொடுத்துள்ளது.

இப்படியாக, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் வெளியே எடுத்துள்ளனர். பிறகு, இதுபற்றி வங்கி ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் விரைந்து வந்து, பொதுமக்களை விசாரித்து, வெளியே எடுத்த பணத்தை திருப்பி தரும்படி வாங்கினர். மேலும், சம்பந்தப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டனர். எனினும், இதுபற்றி போலீசிற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.