பாலாசிங் என்றொரு மகா நடிகன்!

நடிகர் பாலாசிங் குறித்து பிரபல நாடகாசிரியர் அ.ராமசாமி, பன்முக வெளிப்பாட்டுக்காரர் என்று பதிவை வெளியிட்டுள்ளார்.


அந்தப் பதிவு அவரை ஆழமாக ஆய்வு செய்கிறது. பார்வையற்ற பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையில், எதையும் திட்டமிடாமல் இறங்கும் மையப்பாத்திரம் - எல்லாவற்றையும் திட்டமிட்டுக் கெடுதல் செய்ய நினைக்கும் வில்லன் என்ற எதிர்வில் உருவாக்கப்பட்ட அவதாரம் படம் வணிக ரீதியில் வெற்றி பெறாமல் போன படம்.

ஆனால் அதில் நடித்த வில்லன் நடிகர் பாலாசிங்கிற்காகவும் இளையராஜாவின் பாடல்களுக்காகவும் எப்போதும் பேசப்படும் படம். நடிகர் நாசர் அவதாரம் படத்தை இயக்கிய பின்னர்தான் பாண்டிச்சேரிப் பல்கலைக் கழக நிகழ்கலைப்பள்ளிக்கு மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் பட்டறைக்கு அழைத்திருந்தோம்.

சில நாட்கள் அவர் எங்களோடு தங்கியிருந்தார்.மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கிய பின்னர் நானும் அவரும் நடிப்புக் கோட்பாடுகள் பற்றியும் அவதாரம் படத்தில் சிலகாட்சிகள் அமைக்கப்பட்ட போது பின்பற்றப்பட்ட புதுப்புது உத்திகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அவதாரத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காகச் சென்னையை விட்டுவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த பாலாசிங்கைத் தேடிப்போன கதையையும் சொன்னார். அப்போது தான் ஒரு படத்தில் நாயகப் பாத்திரத்திற்கு இணையாக வில்லன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகரைத் தேர்வுசெய்ய வேண்டியதைக் குறித்தும் பேசினார்.

கூத்து, நடிப்பு போன்றவற்றைச் சொல்லாடலாகக் கொண்ட அவதாரம் படத்தில் நாயகப்பாத்திரமும் எதிர்நிலைப்பாத்திரமும் இவ்விரு சொல்லாடல்களையும் உள்வாங்கிய பாத்திரங்கள். எனவே அதனைப் புரிந்து நடிக்கக் கூடிய நடிகர்கள் வேண்டும்.

அதனாலே என்னைப் போலவே நடிப்பார்வத்தோடு சென்னைக்கு வந்து நாடகம், சினிமா எனத் தொடர்ந்து முயற்சிசெய்த - நடிப்புமுறைகளைக் கற்றுத்தேர்ந்து பயன்படுத்த முடியாமல் இருந்த பாலாசிங்கை அழைத்து வந்தேன் என்றார்.

அந்தக் காலகட்டத்தில் நாயக நடிகர்களுக்கு இணையாக எதிர்நிலை நாயகப் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வில்லன் நடிகர்களும் நேரம் காலம் பார்க்காமல் நடித்துக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் முக்கியமான படங்களாக உருவான ரஜினிகாந்தின் பாட்ஷா, முத்து, அருணாசலம் ஆகிய படங்கள் வில்லன் நடிகர் ரகுவரனின் உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிக் கொண்டு வந்த படங்கள்.

அந்த வரிசையில் ஷங்கரின் முதல்வன் படத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல கமல்ஹாசனின் தேவர் மகனும் குருதிப்புனலும் நடிகர் நாசரின் நடிப்புத் திறனுக்குத் தீனிபோட்ட படங்கள் என்பதை நினைத்துக்கொள்ளவேண்டும். ரகுவரன், நாசர் வரிசையில் நடிகர் பாலாசிங்கும் முழுமையான வில்லன் நடிகராகத் தமிழில் வலம் வருவார் என்று நினைத்தபோது, அவருக்குத் தரப்பட்ட தனிக்காட்சி வில்லன் என்ற உருவாக்கம் முழுமையான வில்லனாக ஆகாமல் குணச்சித்திர நடிகர் என்ற வகைப்பாட்டிற்குள் தள்ளிவிட்டது.

எனக்குப் பாலாசிங்கோடு நேரடிப்பழக்கம் உண்டு என்றாலும் நாசர் அளவுக்கு அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கலைஞர் மு.கருணாநிதியின் நாவலான தென்பாண்டிச் சிங்கத்தைப் பொதிகைத் தொலைக்காட்சிக்காக கவிஞர் இளையபாரதி இயக்கியபோது நாங்கள் எல்லாம் அதில் நடித்தோம்.

கலைஞரின் கதை, இளையபாரதியின் இயக்கம் என்ற நிலையில் பெரிய நடிப்புப் பட்டாளமே அதில் இருந்தது. திரைப்பட அறிமுகம் பெற்றிருந்த நாசர், மௌனிகா, கீதா, விநோதினி, பாலாசிங் ஆகியோரோடு நாடகக்காரர்களான மு.ராம்சாமி, இரா.ராஜு, பசுபதி ஆகியோரும் நடித்தார்கள். நான் நாசரின் முதன்மைத்தளபதியாக நடித்தேன்.

இளையராஜா இசை அமைத்த முதல் தொலைக் காட்சித் தொடர் என்ற பெருமை கொண்ட அத்தொடர் பாகனேரி, பட்டமங்கலம் என்னும் மறவர் நாடுகளுக்கிடையேயான உறவையும் முரணையும் கதையமைப்பாகக் கொண்டது. அத்தொடரில் நண்பர் அருண்மொழியும் மறைந்த பின் நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷும் இணை இயக்குநர்களாக இருந்தார்கள்.

மதுரை திருமலை நாயக்கர் மகால், காரைக்குடிப் பக்கம் இருக்கும் செட்டிநாட்டு வீடுகள், கோயில்கள், குளங்கள் எனத் தேடித் தேடிப் படப்பிடிப்பு நடந்தது. நான் புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குப் பெயர்ந்தபோது அத்தொடரிலிருந்து விலகிக் கொண்டேன். பலவகையான பாத்திரங்களுக்கு - அதன் வெளிப்பாட்டுணர்வுகளுக்கேற்ப பாவங்களையும் உடல்மொழியையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட நடிகர் பாலாசிங்.

அவரது மறைவு பலவற்றை நினைக்கக் காரணமாகிவிட்டது. நேற்றிரவு சென்னையிலிருந்து கிளம்பும்போது மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் வந்தது. இன்று நெல்லையில் வந்து இறங்கியபோது அவர் இல்லாமல் ஆகிவிட்டார் என்று தகவல் வருகிறது.

இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் கையில் இல்லை