இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு பகவத் கீதைன்னா, மருத்துவ மாணவர்களுக்கு மனுநீதி தர்மமா?

அண்ணா பல்கலைக்கழகம் 8 விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தத்துவவியல், ஒழுக்கநெறி, பக்வத்கீதை, சமஸ்கிருதம் உட்பட எட்டு பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்ப பாடமாக தேர்வுசெய்ய வேண்டுமாம்.


இந்த விவகாரம்தான் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இது நாட்டில் வேறு எந்த கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்படவில்லை. மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக வேந்தர் சூரப்பா அறிமுகப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கப்போகும் இந்த சமயத்தில் எழுந்துள்ள இந்த சர்ச்சை, அ.தி.மு.க. அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்ட குழுவுக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் வேற்று மத மாணவர்களும் படித்துவரும் நிலையில் ஹிந்து மத நூல்களை மட்டுமே சேர்த்திருப்பதும் கூடுதல் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. நீதிபோதனை என்றால் இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம் ஆகிய அனைத்து நீதிபோதனைகளும்தானே இருக்க வேண்டும் என்று சிலர் கேள்வியெழுப்புகின்றனர்.

ஏ.ஐ.சி.டி.இ. இந்தியாவில் 6 மண்டலங்களில் இயங்கிவருகிறது. ஆனால் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டலத்தில் மட்டும் பகவத் கீதையை அவசரமாக பாடமாக்க வேண்டிய தேவை என்ன? சரி சார், பொறியியல் படித்தவர்களுக்கு கீதை என்றால், மெடிக்கல் படிப்பவர்களுக்கு மனுநீதி தர்மம் சொல்லித்தரப் போகிறீர்களா..? என்று கேள்விகள் எழுந்துள்ளன.