ஆட்டோ ஷங்கர் சீரிஸ் பகுதி 6 : சீரியல் கொலைகள் செய்ததற்கு சொன்ன பகீர் காரணம்!

ஆட்டோ சங்கருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தன்னுடைய தீர்ப்பை 238 பக்கங்களில் எழுதியிருந்தார். தீர்ப்பின் முக்கிய பகுதிகள் மட்டும் இங்கு.


"எதிரிகள் 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.  இம்மாதிரி கொலைகளை செய்தவர்களுக்கு தக்கபடி தண்டனை அளித்தால்தான் நீதியின் நலன் விளங்கும். இல்லையேல் அக்கிரமங்கள் ஆனந்த கூத்தாடும். அநியாயங்கள் தலைவிரித்தாடும். இப்படியே சென்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாகிவிடும்.

அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்காவிட்டால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும். நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டுமானால் இம்மாதிரியான கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்.

அவ்வாறு தக்க தண்டனை அளித்தால்தான் இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும். இந்த எதிரிகளின் கொலையை பார்க்கும்போது தனக்கு எதிராக இருக்கும் நபர்களை அடியோடு அதாவது வேரோடு அழித்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சட்டத்தை தன் கையிலேயே எடுத்துக்கொண்டு "சட்டம் என் கையில்" என்று இவர்களே ஒரு தனி கூட்டமைப்பு அமைத்து அவர்களுக்கு எதிரானவர்களை பழி வாங்கி இருக்கும் கொலையை பார்க்கும்போது அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்ததுஅவ்வாறு தண்டனை அளித்தால்தான் நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அனைவரும் அமைதியுடன் வாழ வழி ஏற்படும். எனவே, நீதியின் நலன் கருதியும், வழக்கின் தன்மையை கருதியும் சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்கிறேன்.எதிரிகள் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.

எதிரிகள் சங்கர், எல்டின், சிவாஜி மூவரும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இவர்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மரணதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தினரால் உறுதி செய்யப்படவேண்டும். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு (அப்பீல்) செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.


தண்டனை பெற்ற 8 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

"அடையாளம் கண்டுபிடிக்க முடியாத எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்று ஊக அடிப்படையில் கூறி, அவர்களை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வேண்டும் என்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, நிரபராதியான எங்களை விடுதலை செய்யவேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

நீதிபதிகள் கே.எம்.நடராஜன், டி.சோமசுந்தரம் ஆகியோர் இந்த அப்பீல் வழக்கை விசாரித்தார்கள். 4 மாதம் 6 நாட்கள் இந்த அப்பீல் மனு மீது வக்கீல் வாதங்கள் நடந்தனஇந்த அப்பீல் வழக்கில் 17.7.1992 அன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். இதேபோல ஜெயவேலு, ராமன், ரவி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்படாததால் பழனி, பரமசிவம் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறி இருந்ததாவது

"கொலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் எலும்புக்கூடுகளை வைத்து, இவர்கள்தான் ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று ஆட்டோ சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.  

இதையொட்டி 5 பேரின் மண்டை ஓடுகளும் "சூப்பர் இம்பொசிசன் டெக்னிக்" என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும், மண்டை ஓடுகளும் ஒன்றாக பொருந்தி இருப்பதை தடய இயல் நிபுணர் சந்திரசேகர் ஐகோர்ட்டில் நிரூபித்துக் காட்டியதை இக்கோர்ட்டு ஏற்கிறது.

மேலும், செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி தெளிவான முறையில் தீர்ப்பு கூறியதை இக்கோர்ட்டு பாராட்டுகிறது."

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தார்கள்.

இந்த வழக்கில் துப்பு துலக்கிய குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் வக்கீல்களுக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தார்கள்தீர்ப்பு மொத்தம் 371 பக்கங்களில் இருந்தது. ஐகோர்ட்டில் கூறப்பட்ட கிரிமினல் வழக்கு தீர்ப்புகளில் இதுவே மிகவும் பெரிய தீர்ப்பாக அமைந்தது.  ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆட்டோ சங்கரும், மற்றவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் "அப்பீல்" செய்தனர்

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெயசந்திரரெட்டி, ஜி.என்.ரே ஆகிய 2 நீதி பதிகள் விசாரித்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 5.4.1994-ல் தீர்ப்பு கூறப்பட்டது.

ஆட்டோ சங்கர், எல்டின், ஆகிய 2 பேருக்கும் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். மற்றும் சிவாஜி, ஜெயவேலு, ராமன், ரவி ஆகிய 4 பேர்களுக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதுபோலீஸ் தரப்பில் அரசாங்க வக்கீல்கள் சுப்பிரமணியம், கே.வி.வெங்கடராமன், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ரெட்டி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் ஆட்டோ சங்கர் மற்றும் எல்டின் சார்பாக ஆஜராகிய வக்கீல்கள், "வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த உள்ளூர் சினிமா படங்களின் பாதிப்பு காரணமாகவே இந்த குற்றங்கள் நடந்துள்ளன. எனவே, இதற்கு காரணமான, அந்த சினிமா தயாரிப்பாளர்களே இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்" என்று வாதாடினார்கள்இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் 76 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

"வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்த சினிமா படங்களினால் குற்றம் ஏற்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால், ஆட்டோ சங்கர் மற்றும் எல்டினைப் பொறுத்தவரையில், வன்முறை மற்றும் ஆபாச சினிமாக்கள் தான் அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது என்று சொல்லுவதற்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பாகவே கொடூரமான குற்றவாளிகளாக இருந்தனர்.

சினிமா என்றால் கதாநாயகிகள், வளைவு, நெளிவுடனும், அதிகப்படியான கவர்ச்சியுடனும் தோன்ற வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. அதேபோல, கொடூர செயலில் ஈடுபடும் வில்லன்களை கொடூரமாக பழிவாங்கும் கதாநாயகர்கள் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத நடைமுறையா என்பதும் தெரியவில்லை.

சினிமா என்பது கலையையும் கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது ஆகும். ஆனால், அந்த கலை, கலாசாரத்தை ஆபாசமாகவும் வன்முறை காட்சிகளாகவும் சித்தரிப்பதால், அந்த நோக்கத்துக்காகத்தான் சினிமா எடுக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது." என்று கூறிய நீதிபதிகள் ஆட்டோ சங்கருக்கு தூக்கை உறுதி செய்தனர்.