ஆட்டோ ஷங்கர் சீரிஸ் பகுதி 5: தூக்கு தண்டனை ஏன் தெரியுமா?

ஆட்டோ சங்கர் மீது போடப்பட்ட குற்றப்பத்திரிகை மிகவும் பரபரப்பாக இருந்தது. 28.10.1987 அன்று சுடலை, 8.1.1988 அன்று லலிதா, 15.3.1988 அன்று ரவி, 29.5.1988 அன்று சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரும் கொலை செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.


நீதிபதி மோகன்தாஸ் வழக்கை விசாரித்தார். முதலாவதாக அப்ரூவர் பாபு சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து 9 மாஜிஸ்திரேட்டுகள், 5 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் உள்பட மொத்தம் 134 பேர் சாட்சியம் அளித்தனர். சினிமா நடிகை புவனி மற்றும் விபசார அழகிகள் அனிதா, கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர்

அரசு தரப்பில் வக்கீல்கள் கம்பம் சுப்பிரமணியம், எஸ். கோபாலகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். ஆட்டோ சங்கர் தரப்பில் வக்கீல் நடராஜன், அவருக்கு உதவியாக கணேஷ், மனோகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்இந்த வழக்கில் 31.5.1991 அன்று தீர்ப்பு கூறப்பட்டதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் மீதான வழக்கு விசாரணை தனியாகப் பிரித்து நடைபெற்றதுஎனவே, ஆட்டோ சங்கர் உள் பட 8 பேரும் கை விலங்கு மாட்டி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீர்ப்பு கூறும் முன் அவர்களிடம் நீதிபதி, "உங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஆட்டோ சங்கர், "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று பதில் அளித்தான். மற்றவர்களும் அதையே கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரிடமும் "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. 10:49 மணிக்கு நீதிபதி எழுந்து அவரது அறைக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரிபார்த்து குறித்துக்கொண்டனர்.

பகல் 11:45 மணிக்கு நீதிபதி மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார். ஒரே நிமிடத்தில் அதாவது 11:46 மணிக்கு தனது தீர்ப்பை கூறிவிட்டு உடனடியாக அவரது அறைக்கு சென்றுவிட்டார். "ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறேன். இவர்களை அழைத்துக்கொண்டு போகலாம்" என்று மட்டுமே நீதிபதி கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் மீண்டும் கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்ஆட்டோ சங்கர் கோர்ட்டுக்கு வரும்போது சிரித்தபடியே வந்தான். பத்திரிகை நிருபர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டான். போட்டோ கிராபர்களுக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தான்.

கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டபின் ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளை பார்த்து சிரித்துக்கொண்டான். அவனது முகத்தில் எந்தவித கவலையும் தெரியவில்லைதன்னுடைய தாயைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தான் ஆட்டோ சங்கர்.