18கிலோ மீட்டர் பயணத்திற்கு ரூ.4300 கட்டணம்! பெண் என்ஜினியரிடம் ஆட்டோ டிரைவர் போட்ட பில் !

புனே: புதியதாக ஊருக்கு வந்த சாஃப்ட்வேர் ஊழியரிடம் ஆட்டோ டிரைவர் ரூ.4,300 பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் ஊழியர் சமீபத்தில் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.  அவருக்கு, எரவாடா போலீஸ் நிலையத்தின் அருகே தங்கும் இடம், அவரது கம்பெனி சார்பாக ஒதுக்கப்பட்டது. அதில் தங்கியபடி, தினசரி கேப் புக் செய்து, அலுவலகத்திற்கு சென்று வரும்படி, அவருக்குக் கூறப்பட்டது.

இதன்படி, பெங்களூருவில் இருந்து புனேவிற்கு அவரும் இடம் மாறியுள்ளார். புதன்கிழமை அதிகாலை பேருந்தில் வந்த அவர், புனேவில் உள்ள கட்ராஜ் எனும் இடத்தில் அதிகாலை 5 மணிக்கு இறங்கியுள்ளார். அங்கிருந்தபடி எரவாடா செல்ல, கேப் எதுவும் கிடைக்குமா என தேடியுள்ளார். ஆனால், கேப் எதுவும் கிடைக்காத நிலையில், அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார்.

கட்ராஜில் இருந்து எரவாடா செல்ல 18 கிமீ ஆகும் என்பதால், அதற்கு மீட்டரில் காட்டும் கட்டணத்தை தரும்படி ஆட்டோ ஓட்டிய நபர் கூறியுள்ளார்.  இதனை நம்பி ஆட்டோவில் ஏறிய சாஃப்ட்வேர் ஊழியருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், உண்மையான ஆட்டோ டிரைவர் உள்ளே போதையில் அமர்ந்திருக்க, அவரது நண்பர் ஒருவர் ஆட்டோவை ஓட்டிய விசயம் தெரியவந்தது.

இருந்தாலும், நம்பிக்கையுடன் எரவாடா புறப்பட்டார். எரவாடா வந்ததும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து புனேவிற்கு புதியதாக வந்த நபர் என்பதால் அவரை ரூ.4,300 தரும்படி மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி பயந்துபோன சாஃப்ட்வேர் ஊழியர், அந்த பணத்தை கொடுத்துவிட்டு, தனது தங்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

பொழுது விடிந்த பின், இதுபற்றி எரவாடா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆட்டோவின் பதிவு எண்ணையும் போலீசாரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.