மூன்றரை மாத கர்ப்பம்..! ஆனாலும் நாட்டை காப்பாற்ற களம் இறங்கிய கர்ப்பிணி தீயணைப்பு வீராங்கனை! நெகிழ வைக்கும் சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாது அந்த பணியில் ஈடுபட்டு வரும் வீராங்கனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரு சிறுவன் செய்த விளையாட்டுத்தனத்தால் காட்டுத் தீ பற்றிக்கொண்டது. என்றாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்பது போல அந்த சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வறண்ட வானிலை நிலவி வருவதால் தீயணைப்புத்துறையினரால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 300 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆயின.  

கடுமையாக பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத்துறையை சேர்ந்த ஒரு பெண் வீராங்கனையும் ஈடுபட்டுள்ளார். அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் கேத் ராபின்சன் வில்லியம்ஸ் என்ற அந்த பெண் தாரீ என்ற நகரத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 24. பொதுவாக உடல் நலத்தை கருத்தில் கொண்டு எந்த துறையிலும் கர்ப்பிணிகள் முக்கியமாக ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்த மாட்டார்கள்.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக தீயணைப்பு வீராங்கணையாக ஈடுபட்டு வரும் கேத் தன்னுயிரை துச்சமென மதித்து காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உறவினர்கள், நண்பர்கள் அனுமதி மறுத்தபோதும் கேட்காத கேத் இந்நிகழ்வை இன்ஸ்டாகிராமில் ஒரு செல்பி எடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

"நான் ஒரு தீயணைப்பு வீராங்கனை. மற்றவர் சொல்வதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை. தீயை அணைக்கும் பணியை கைவிட போவது இல்லை. என் உடல் ஒத்துழைக்காமல் சொன்னால் மட்டுமே நிறுத்துவேன்" என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவுகள் , பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், குவிந்து வருகின்றன. கர்ப்பம் தரித்தாலே 6 மாதம் பேறுகால விடுப்பு எடுத்துக்கொண்டு செல்லும் பெண்கள் மத்தியில் இப்படி ஒரு கடமை உணர்ச்சி உள்ள பெண்ணை பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.