உள்ளாட்சி பதவி ஏலம் ஆரம்பம்! ஏலம் ஒரு முறை! ஏலம் இரண்டாவது முறை! ஏலம் கடைசி முறை!

உள்ளாட்சித் தேர்தலில் அதுவும் குறிப்பாக கிராமப்புற ஊராட்சி, ஒன்றியத் தேர்தல்களில் வசதி படைத்தவர்களும், வாய்ஸ் உள்ளவர்களுமே தலைமைப் பதவிக்கு வருவார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம்.


அதனால், குறிப்பிட்ட தொகையை ஊருக்குத் தருவதாக சொல்லி பதவிக்கு வந்துவிடுவார்கள். அந்தப் பணத்தை ஊருக்கு அவர்கள் தந்தார்களா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், நடக்காத திட்டங்களை எல்லாம் முடிந்ததாகச் சொல்லி கையெழுத்து போட்டு கணக்குக் காட்டிவிடுவார்கள்.

அதன்படிதான் இப்போது கடலூர் அருகில் ஊராட்சித் தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கும், துணைத் தலைவர் பதவி 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இது கடலூர் பகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. 

இந்த வகையில் தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஜனநாயக நடைமுறைதான் என்று விளக்கம் சொல்லப்படுகிறது. பொருத்தமான ஒருவர் வேட்பாளராக நிற்கிறார், ஆகவே நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்று மற்றவர்கள் ஒதுங்கிக்கொள்வது வேறு. நான் பணம் கொடுத்து விட்டேன், ஆகவே நீ போட்டியிடாதே என்று தடுப்பது வேறு.

இப்போது தலைவர் பதவியை ஏலத்திற்கு எடுத்தவர் அ.தி.மு.க. என்றும், துணைத் தலைவர் பதவியை ஏலம் எடுத்தவர் அவர்களது கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வைச் சேர்ந்தவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வேறு எங்கும் இப்படி நடந்துவிடாமல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேவலப்படுத்தியவர்கள் நாம் என்று பெருமை கொள்ள நேரிடும். அரசு உடனே தலையிட வேண்டும்.