மகள் உறவுப் பெண்ணுடன் ஓரினச் சேர்க்கை! டூட்டி சந்த் தாய் வெளியிட்ட திடுக் தகவல்!

ஜெய்ப்பூர்: டூட்டி சந்தின் ஓரினச்சேர்க்கை உறவுக்கு, அவரது தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பிரபல தடகள வீராங்களை டூட்டி சந்த் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று,வெளிப்படையாக அறிவித்துள்ளார். அத்துடன், தனது உறவின பெண்ணை மிக நேசிப்பதாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் விளையாட்டுத் துறை மட்டுமின்றி, டூட்டி சந்தின் குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

குறிப்பாக, அவரது சகோதரி, தன் தங்கையை சிறையில் தள்ள சிலர் சதித்திட்டம் தீட்டுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், டூட்டியின் தாயாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள டூட்டி சந்தின் தாயார், ''எனக்கு பேத்தி முறையில் உள்ள பெண்ணை என் மகள் காதலிப்பதாகக் கூறுகிறாள். அதாவது, உறவு முறைப்படி, அந்த பெண்ணிற்கு, என் மகள் அம்மா முறை. மகள் போன்றவளை காதலித்து, திருமணம் செய்யப் போவதாக, அவள் கூறுவதை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்.

இதை, என் சமூகத்தினர் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், தனது நண்பர்கள் மூலமாக, இதை செய்வேன் என, அவள் என்னை மிரட்டுகிறாள். நீதிமன்றம், ஓரினச் சேர்க்கை உறவுக்கு அனுமதி அளித்துவிட்டதால், எந்த பயமும் இல்லை என்றும் அவள் என்னிடம் சொல்கிறாள். என்னால் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. விளையாட்டில் கவனம் செலுத்தாமல், இப்படி அரசு தரும் பணத்தை காதலுக்காக அவள் வீணடிக்கிறாள்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

அதேசமயம், டூட்டின் அண்டை வீட்டில் வசிக்கும் சிலர் கூறுகையில், உச்ச நீதிமன்றமே ஓரினச் சேர்க்கையை சட்டப்படி அங்கீகரிப்பதாகக் கூறிவிட்டது. இது உணர்ச்சிகரமான பிரச்னை என்பதால், இதில் எடுத்தேன், கவிழ்த்தேன் என எதுவும் தடாலடியாகச் சொல்லிவிட முடியாது, என்கின்றனர்.