இந்த நாள்! இந்த நேரத்திற்கு பிறகு அத்திவரதரை மக்கள் பார்க்க முடியாது! பக்தர்களை கண்கலங்க வைக்கப்போகும் நிகழ்வு!

அத்திவரதர் உற்சவத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று மதியம் 12 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


 காஞ்சிபுரத்தில் 40 நாள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது.  முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும் இனி வரக்கூடிய காலங்களில் நின்ற கோலத்திலும் காட்சி அளித்து வருகிறார் அத்திவரதர்.  சயன கோலத்தில் காட்சி அளித்தபோது வருகை தந்த கூட்டத்தை விட தற்பொழுது லட்சக்கணக்கான மக்கள் அலை மோதி அத்தி வரதரை தரிசிக்க வருகை தருகின்றனர். 

 இதனால் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக நான்கு சக்கர வாகனங்களும், முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கென  தனி வரிசை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை பலப்படுத்த 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவில் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வருகின்ற ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அரசு விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாளில் இன்னும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிவடைய உள்ள அத்திவரதர் உற்சவ திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளதாவது, ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அதன்பின் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி மூடப்பட்டு வரிசையில் நிற்கும் பக்தர்கள் மட்டுமே பின் தரிசனதிற்கு  அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும்  ஆகஸ்ட் 16ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.