விற்பனையில் தொடர் சரிவு! மூடப்பட்ட சென்னை அசோக் லேலண்ட் கார் தொழிற்சாலை!

மோட்டார் வாகன துறையின் மந்த நிலையால் நாடு முழுவதும் பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. ஹூண்டாய், மாருதி உள்ளிட்ட பெரிய கார் நிறுவனங்களும், உதிரி பாக தயாரிப்பாளர்களும் உற்பத்தி இல்லா நாள்களை அறிவித்து தொழிற்சாலைகளை மூடி வருகின்றனர்.


தற்போது இந்த பிரச்சனையில் மோட்டார் வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேலாண்டும் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

வணிக ரீதியான வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமான அசோக் லேலாண்ட், செப்டம்பர் 6, 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை தொழிற்சாலை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. செப்டம்பர் 9-ம் தேதியை ஏற்கெனவே உற்பத்தி இல்லா நாளாக அறிவித்து இருந்த நிலையில், மொத்தம் 5 நாள் அசோக் லேலாண்ட் ஆலை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் அசோக் லேலாண்ட் 8,296 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது, 50 சதவிகிதம் குறைவான விற்பனை எனவும் தெரிய வந்துள்ளது.

ஆலையில் விடுமுறை அறிவிப்பு குறித்து அசோக் லேலாண்ட் நிறுவன ஊழியரை கேட்டபோது, ' விடுமுறை அறிவித்திருப்பது உண்மைதான். ஆனால் இந்த விடுமுறை ஊதியத்துடன் கூடியது என்பதால் தொழிலாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை' என்று தெரிவித்து உள்ளார்.

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டபோது, "இதுபற்றி எந்தத் தகவலும் தரமுடியாது" என மறுத்து விட்டனர்.