குரூப் 4 எழுதுறீங்களா? ஹால் டிக்கெட் டவுன்லோடு பண்ணிக்கோங்க!

செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்சி. குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.


தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் அடங்கிய பணிகளுக்கான தேர்வுக்கு கடந்த ஜூன் 14ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கு மொத்தம்  16.30 லட்சத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. குரூப் 4 தேர்வு தமிழகத்தில் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெற உள்ளது.

மேலும் சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net  மற்றும் www.tnpscexams.in-ல் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் / பயனாளர் குறீயீடு (Application No. / Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வுக் கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான  செலுத்துச் சீட்டின் (Challan) நகலுடன் பின்வரும் விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அதாவது விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப பதிவு எண் (Registration ID), விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம் / வங்கி, வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி: Transaction ID and Date ஆகியவற்றை தெளிவாக ஈமெயிலில் அனுப்ப வேண்டும்.

ஆகஸ்ட் 28ம் தேதிக்கு பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின்  மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம்  விண்ணப்பதாரர்கள் தங்களது   நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம்  இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.