நாள் முழுதும் உட்காந்துக்கொண்டே வேலைபார்ப்பதால் உங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலையா?

அலுவலகங்களில் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவரா நீங்கள்...


உங்களுக்கு முதுகு வலி, அஜீரண கோளாறு, உடல் பருமன், தசைப்பிடிப்பு, டென்சன் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.எனவே, இத்தகைய நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்...

காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் பணியை துவங்கும் முன் ஒரு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள், அதன் பிறகு வேலையை தொடங்கினால் பணியினால் ஏற்படும் பதற்றம் குறைவதோடு மட்டுமல்லாமல், பிரெஷ்ஷாக உணர்வீர்கள்.

கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள்.

உட்காருவதற்கு நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

மேலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும்.

இதை தவிர்க்க சோர்வாக தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.