மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

மனிதனின் அன்றாட கடமைகளுள் ஒன்று தான் மலம் கழிப்பது. அப்படி மலம் கழிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைமே கெடுத்துவிடும்.


தினமும் மலம் கழித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிறப்பாக செயல்படும். ஆனால் மலச்சிக்கல் காரணமாக இன்று பலர் அன்றாடம் வெளியேற்ற வேண்டிய கழிவுகளை வெளியேற்றாமல், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேற்றுகிறார்கள்.

மலச்சிக்கலால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தான் மூல நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மூல நோய் என்பது கீழ் மலக்குடல் மற்றும் ஆசன வாயில் உள்ள நரம்புகளின் அழற்சி ஆகும். நன்கு இறுக்கமான மலத்தை ஆசன வாயின் வழியே கடத்தும் போது நரம்புகளில் கொடுக்கப்படும் அழுத்தம் தான் ஒருவரை மூல நோய்க்கு வழிவகுக்கிறது.

மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் வலி, எரிச்சல், அரிப்பு மற்றும் ஆசன வாய் பகுதியில் அசௌகரியத்தை சந்திப்பார்கள். மேலும் மலம் கழிக்கும் போது வலியில்லாமல் இரத்தக்கசிவும் ஏற்படும். இப்படிப்பட்ட மூல நோயை சரியான சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும். குறிப்பாக உணவுகளின் உதவியுடன் மூல நோயை நிச்சயம் சரிசெய்ய முடியும்.

குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கமடைந்த நரம்புகளை சுருங்கச் செய்து, மூல நோயால் ஏற்படும் வலியை சரிசெய்து, விரைவில் குணமாக்கும். இக்கட்டுரையில் மூல நோய் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை உட்கொண்டு, மூல நோயில் இருந்து விடுபடுங்கள்.

முழு தானியங்கள்

நார்ச்சத்துள்ள உணவுகள் மலச்சிக்கலில் இருந்து மட்டுமின்றி, மூல நோயில் இருந்தும் விடுவிக்கும். முழு தானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களுக்குப் பதிலாக, முழு தானிய உணவுப் பொருட்களான ப்ரௌன் பிரட், கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

இதனால் அப்பொருட்களில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தை வேகப்படுத்தும். ஆண்கள் ஒரு நாளைக்கு 30 முதல் 3 கிராம் நார்ச்சத்தும், பெண்கள் ஒரு நாளைக்கு 21 முதல் 25 கிராம் நார்ச்சத்தும் எடுக்க வேண்டியது அவசியம்.

நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

நார்ச்சத்து நிறைந்த நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளான ஆப்பிள், அத்திப்பழம், பேரிக்காய், பெர்ரிப் பழங்கள், மாம்பழம், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், குடலியக்கம் மேம்பட்டு, மூல நோய்க்கான அறிகுறிகள் மறைய ஆரம்பிக்கும். ஆகவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்..

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். ஆகவே சிட்ரஸ் பழங்களை மூல நோய் உள்ளவர்கள் உட்கொண்டால், ஆசன வாயில் உள்ள வீக்கமடைந்த நரம்புகள் சரிசெய்யப்பட்டு, விரைவில் மூல நோய் குணமாகும்.

மேலும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மட்டுமின்றி, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளித்து, குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இந்த பழங்களை மூல நோய் உள்ளவர்கள் அன்றாடம் உட்கொண்டு வந்தால், வலிமிகுந்த மூல நோய்க்கான அறிகுறிகளில் இருந்து விடுபடுவதோடு, குடலியக்கம் சிறப்பாக நடைபெறும்.

உலர்ந்த முந்திரிப்பழம்

உலர் முந்திரிப்பழத்தில் உள்ள சார்பிடால், பெருங்குடலை செயல்படுத்தவும், குடலியக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உலர் முந்திரிப் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய பழத்தை தினமும் ஒரு கப் சாப்பிட்டால், அது மலம் கழிக்கும் போது ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும்.

ஆளி விதை

ஆளி விதையில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்திற்கு உதவும். அதேப் போல் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆசன வாயில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைக்க உதவும். ஆகவே ஆளி விதையை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்கள்.

உலர் திராட்சை

உலர்ந்த திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இது நல்ல மலமிளக்கும் பொருளாக செயல்படும். மேலும் இப்பழத்தில் அன்றாட உடலுக்கு வேண்டிய நார்ச்சத்தின் அளவு நிறைந்துள்ளது. ஆகவே உலர் திராட்சையை தினமும் இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் திராட்சையுடன் நீரையும் உட்கொள்ளுங்கள். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு, மூல நோய் பிரச்சனையும் விரைவில் குணமாகும்.

#காபி

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான காபியைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் காபியில் உள்ள காப்ஃபைன், இறுக்கமடைந்த மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற உதவும். முக்கியமாக காபியை அளவாக குடித்தால் தான் நற்பலன்களைப் பெற முடியும். அதிகமானால், அதுவே ஆபத்தாகிவிடும்.