தீபாவளிக்கு நிறைய நிறைய பர்சேஸ் செய்யப் போறீங்களா? அதுக்கு முன்பு இதை படிங்க!

தீபாவளி என்றாலே புத்தாடையும் பட்டாசுகளும்தான் ஞாபகத்துக்கு வரும். ஏழைகளுக்கு இதுதான் சொர்க்கம். ஆனால், பணம் படைத்தவர்களுக்கு இது ஒரு சாக்கு என்று ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி ஏகப்பட்ட பொருட்களை வாங்கிப் போடுவார்கள்.


தேவையோ, தேவை இல்லையோ நிறைய பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவு இது. ஆம், இன்ஃபோசிச் சுதா மூர்த்தி பற்றி மீனா ராஜன் எழுதியிருக்கும் இந்தப் பதிவு அர்த்தமுள்ளது ஆகும்.

ஆடித்தள்ளுபடி ஆஃபர், அள்ளிக்கோ ஷாப்பிங் என சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துணிக்கடைகளை மொய்க்கத் தொடங்கியுள்ளன மக்கள் கூட்டம். தேவைக்காக ஷாப்பிங் செய்தது மாறி இப்போது போர் அடித்தால் ஷாப்பிங் என்ற அளவிற்கு மக்கள் ஆடம்பரத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக எளிமையாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமில்லாமல் இருப்பதை கேட்டால் இன்றைய நவீன உலகில் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?

பணம் கொட்டிக் கிடந்தால் கட்டித்தங்கத்தில் பிளவுஸ், வைரத்தில் செல்போன், ஹேண்ட் பேக் என்று ஃபேஷன் ஃபீரிக்குகளாக வலம் வருபவர்கள் மத்தியில் அமைதி, எளிமையே உருவான சுதா மூர்த்தி நம் மனதை ஆட்கொள்கிறார்.

இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியும், இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் தலைவருமான சுதா மூர்த்தி தனித்து அடையாளம் காணப்படுவதற்கும் அவர் மீது தனி மரியாதை ஏற்படுவதற்கும் அவருடைய சாதனைகள் மட்டும் காரணமல்ல.

வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதாவை யாருமே ஆடம்பரமான உடையிலோ அல்லது நகைகள் அணிந்தோ பார்த்ததேயில்லை.

சாதாரண காட்டன் புடவையை அணிந்து கொண்டிருக்கும் இவரைப் பார்த்தால் பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். இதில் பெண்களுக்கு ஷாக் அடிக்கும் மற்றொரு விஷயம் என்ன தெரியுமா சுதா மூர்த்தி 21 ஆண்டுகளாக ஒரே ஒரு புதுப் புடவை கூட வாங்கியதில்லையாம்.

இதற்கு அவர் கூறும் காரணம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும். “நான் காசிக்கு சென்றிருந்த போது புனித நதியில் நீராடும் போது நமக்குப் பிடித்த எதையாவது விட வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஷாப்பிங் செய்வதை விட்டுவிடுவதாக, குறிப்பாக சேலைகள் வாங்குவதை விட்டுவிடுவதாக உறுதியெடுத்தேன். அப்போது முதல் தேவையானவற்றைத் தவிர வேறு எதையுமே ஷாப்பிங் செய்வதில்லை,” என்கிறார் சுதா மூர்த்தி.

நாம் எப்போதுமே பிறருக்காக வாழ்கிறோம். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்றே பலவற்றை செய்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அது தேவையில்லை, நாம் நமக்காக வாழ வேண்டும்.

“எப்போதுமே நான் பிறருக்கு சொல்லும் அறிவுரை எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். மனிதத்தின் அழகு எளிமையான வாழ்க்கையிலும், நம்பிக்கையிலுமே இருக்கிறது. எனவே உங்களுக்காக வாழுங்கள். என் கணவர் நாராயணமூர்த்தியின் எளிமை என்னையும் தொற்றிக்கொண்டது என நினைக்கிறேன். அவர் மிகவும் எளிமையானவர், நேர்மையானவர், எப்போதும் என்னுடைய ஆடை பற்றியோ அழகு பற்றியோ பேசியதே இல்லை. ஆனால் நான் ஒரு நல்ல மனுஷி என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது’’ என்கிறார் சுதா.

மிகவும் சாதாரணமான புடவை உடுத்தி இருப்பதால் பல நேரங்களில் சுதாவை பலர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளை சந்தித்த போதும் சுதாவின் உறுதியை அசைக்க முடியவில்லை. சங்கடப்பட்டுக் கொண்டு தனது வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளாமல் தனக்கு பிடித்தது போலவே எளிமையாகவே இன்றளவும் வாழ்ந்து வருகிறார் 68 வயதான சுதா.

ஒரு முறை விமான பயணத்திற்காக பிசினஸ் கிளாஸ் வகுப்பினருக்கான வரிசையில் சுதா காத்திருந்த போது அந்த வரிசையில் நின்றிருந்த பணக்கார பெண்மணி ஒருவர் இது வசதி படைத்தவர்கள் செல்லும் வரிசை நீங்கள் ’கேட்டில் கிளாஸ்’ (நீணீttறீமீ நீறீணீss) வரிசைக்குச் செல்லுங்கள் என்று ஏளனம் செய்துள்ளார்.

தனது எளிமையான ஆடையை பார்த்து அவர் இவ்வாறு இகழ்வதை புரிந்து கொண்ட சுதா, அமைதியை மட்டுமே அந்த பணக்கார பெண்மணிக்கு பதிலாக தந்துள்ளார். “வகுப்பு என்பது அதிக பணம் சம்பாதித்தால் மட்டும் வந்துவிடாது.

இந்த உலகில் பல குறுக்கு வழிகளில் கூடத் தான் பணத்தை சம்பாதித்து விட முடியும். ஆடம்பரத்திற்கும், வசதியாக வாழ்வதற்கும் மட்டும் வேண்டுமானால் பணம் உதவும். ஆனால் அதே பணம் உங்கள் வாழ்க்கையின் உன்னதம் என்ன என்பதை புரிய வைக்காது, ஏனெனில் அவை விலை கொடுத்து வாங்க முடியாத மனித மனங்கள்,’’ என்கிறார் சுதா மூர்த்தி.

ஆடம்பரத்தின் பின்னால் இந்த உலகில் உள்ள மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வாழும் உதாரணமாக இருக்கும் சுதா மூர்த்தியின் எளிமை மக்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை யோசிக்க வைத்திருக்கிறது.

கணவர் நாராயண மூர்த்தி உடன் சுதா மூர்ததி காஸ்ட்லியான பொருட்களை வாங்கிக் குவிப்பதில் இல்லை மகிழ்ச்சி உயர்ந்த சிந்தனைகளும், மதிப்புகளுமே சிறந்த மனித வாழ்க்கைக்கான அஸ்திவாரம் என்பதை வாழ்ந்து காட்டி வரும் சுதா மூர்த்தி நிச்சயம் ஒரு நம்பிக்கை நாயகிதான்.