ஐந்தில் ஒரு ஆண் குடிகாரராக இருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். முன்பு 20 வயதைத் தாண்டியவர் மட்டுமே குடிப்பவராக இருந்தார் என்ற நிலை மாறி, இப்போது பள்ளி வயதிலேயே பலர் குடிக்கப் பழகுகிறார்கள்.
நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?
இந்தியாவில் 12.7 சதவிகித பள்ளி மாணவர்கள் ஏதாவது ஒரு சூழலில் மது அருந்தியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பார்த்து குடிக்கக் கற்றுக்கொண்டதாகத்தான் ஏராளமான நபர்கள் சொல்கிறார்கள். அதனால் முதலில் திருந்தவேண்டியது பெரியவர்கள்தான்.
மதுவினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அல்சைமையர் நோயும் வாய் மற்றும் தொண்டையில் புற்று நோயும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மாரடைப்பு, கல்லீரல் கோளாறு, கணைய பாதிப்பு, சர்க்கரை வியாதி, மூட்டுவலி போன்ற ஏகப்பட்ட நோய்கள் மதுவினால் உண்டாகிறது.
தற்கொலைக்கு முயல்பவர்கள் பெரும்பாலும் குடிகாரர்களாகவே இருக்கிறார்கள். அதேபோன்று பெரும்பாலான விபத்துகளுக்கும் குடிகாரர்களே காரணம். சுய கட்டுப்பாடு இருந்தால் அனைவராலும் மதுவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியும். மதுவினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு பல்வேறு சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அதனால் மதுவைக் கண்டால் தூரச் செல்வதே அழகு.