ஸ்டாலினை சந்திக்க பாஜக பெருந்தலைக்கு அப்பாயின்ட்மென்ட்? ரகசியப் பேச்சு தீவிரம்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திக்க பாஜக பெருந்தலைகளில் ஒருவர் பயன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கூறுகின்றன. ஆனாலும் கூட பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது சந்தேகம்தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதே சந்தேகம் பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் இருக்கிறது.

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள ஆகிய கட்சிகளுடன் ரகசியமாக பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிலும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை பாஜக மேலிடம் குறிவைத்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. திமுக மட்டுமே தனியாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. எனவே திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க கடந்த இரண்டு நாட்களாகவே முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்காக திரைமறைவில் பாஜக மேலிடமும் திமுக சார்பில் முக்கிய பிரமுகர் ஒருவரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் பாஜகவில் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் மு க ஸ்டாலின் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் இது குறித்து வெளிப்படையாக பேசமுடியும் என்று திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.