கடைசி நொடியில் தப்பிய இன்பதுரை! அப்பாவு அப்செட்! ராதாபுரம் எம்எல்ஏ இப்போது யார்?

இன்னும் சில மணி நேரம் மட்டும் தாமதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்திருந்தால், இன்பதுரை நிலவரம் மாறியே போயிருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டவில்லையே என்ற கவலையில் இருக்கிறார் அப்பாவு.


நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டவர் அப்பாவு. அந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதனால், `வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைச் சரியாக எண்ணவில்லை. அத்துடன், கடைசி மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையும் முறைப்படி நடக்கவில்லை. அதனால் அவற்றை மீண்டும் எண்ணுமாறு உத்தரவிட வேண்டும்’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது.  இதற்காக தபால் வாக்குப் பெட்டி மற்றும் 34 வாக்குப் பதிவு இயந்திரங்கள் நெல்லையிலிருந்து அரசு வாகனங்கள் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டன.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் 24 பேர் ஈடுபட்டுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்புப் பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இன்பதுரை, அப்பாவு மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த தேர்தலின்போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 262 தபால் வாக்குகளும் இன்று மீண்டும் எண்ணப்பட்டன. அதில், சுமார் ஏகப்பட்ட வாக்குகள் வரை திமுக வேட்பாளர் அப்பாவுக்கே விழுந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து முடிவுகளை அறிவிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

தபால் ஓட்டுக்களைத் தொடர்ந்து 19, 20 மற்றும் 21 சுற்றுகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ரகசியமாக பாதுகாக்கப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே முடிவு அறிவிக்கப்படுமாம். இன்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் வாய்ப்பு போய்விட்டதே என்று அப்பாவு வருத்தப்பட, இப்போதைக்கு தப்பிவிட்டேன் என்று இன்பதுரை பெருமூச்சு விட்டதையும் உயர்நீதிமன்ற வளாகத்தில் பார்க்க முடிந்தது.