தமிழகத்தை மிரட்டும் அன்சருல்லா கேங்! 14 பேர் கைது! யார் இவர்கள்? இவர்கள் நோக்கம் என்ன?

அன்சருல்லா கேங் எனும் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 14 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


கடந்த சில நாட்களாகவே நாகை மற்றும் சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாகையில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அன்சருல்லா எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்டது.

அன்சருல்லா எனும் அமைப்பிற்காக இவர்கள் 2 பேரும் நிதி திரட்டியதாக என்ஐஏ குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 14 பேர் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லி கொண்டுவரப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் 14 பேரும் சென்னை கொண்டுவரப்படுகின்றனர். மேலும் அவர்கள் 14 பேருமே அன்சருல்லா கேங் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுநாள் வரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தொடர்பு என்று தான் என்ஐஏ தமிழகத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் அன்சருல்லா கேங் என்று பெயர் அடிபடுவதால் போலீசார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே அன்சருல்லா கேங் குறித்து சில தகவர்கள் வெளியாகியுள்ளன.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இந்த அமைப்பில் இருப்பார்கள் என்கிறார்கள். மேலும் அவர்களின் பிரதான நோக்கமே அவர்கள் மதத்தை காப்பது தான் என்று கூறிக் கொள்கிறார்கள்.

அன்சருல்லா கேங் வங்கதேசத்தில் தான் செயல்பாட்டில் உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் அன்சருல்லா கேங் செயல்பட்டு வருகிறது. கொடூர கொலை, கடத்தல், வங்கிக் கொள்ளை போன்ற வழக்குகளில் இந்த அமைப்பின் பெயர் அடிபட்டுள்ளது.

ஆனாலும் கூட தற்போது என்ஐஏ அதிகாரிகள் கூறும் அன்சருல்லா அமைப்பு வங்கதேசத்தில் செயல்படும் அன்சருல்லா பங்களா அமைப்புடன் தொடர்புடையதா அல்லது வேறு அமைப்பா என்று விசாரணை தீவிரமாகி வருகிறது.