பால் கறந்து விற்றவர் சென்னையின் பெரும் தொழில் அதிபர் ஆன கதை!

சென்னையில் மாடுகளை வளர்த்து பால் கறந்து விற்றவர் அந்தப் பாலைக் கொண்டே சிறு அளவில் தேனீர் கடை தொடங்கி பெரிய அளவிலான தொழிலதிபராக வளர்ச்சி அடைந்துள்ளார்.


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கராஜு 16 ஆண்டுகளுக்கு முன்  பால் கறந்து விற்று வந்தார். வீடுகள் கடைகள் தோறும் ஊற்றிய பால் போக எஞ்சிய பால் கெட்டுப் போய் வீணாகும் நிலை கண்டு மனம் வலித்ததாகக் கூறுகிறார்.

அதனை தவிர்க்க வேண்டும் என்ற அவரது தவிப்புடனான சிந்தனையில் உருவானது தான் மகாலட்சுமி பால் டெப்போ. வாடிக்கையாளர்களுக்கு ஊற்றிய பால் போக எஞ்சிய பாலைக் கொண்டு சாலையோரத்தில் தேனீர் கடை தொடங்கினார்.

இப்போது அந்தக் கடை நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் கோப்பைகள் தேனீர் விற்பனை செய்யும் பெரிய மையமாக வளர்ந்துள்ளது. அண்ணா நகர் டவர் பார்க் அருகே உள்ள மகாலட்சுமி பால் டிப்போ தினமும் அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்படும் நிலையில் அடுத்த 15-வது நிமிடத்தில் பெருங்கூட்டம் கூடி விடுகிறது. 

அதிகாலையில் வாக்கிங் செல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் முதல், ஆட்டோ ஓட்டுநர்கள் வரை அனைத்து தரப்பினரும் தேனீர், லெமன் டீ, உள்ளிட்ட பானங்களின் தனிச் சுவையைத் தேடி இங்கு வந்து விடுகின்றனர். தற்போது இந்த மையத்தின் நிர்வாகியாக உள் ராமலிங்க ராஜுவின் மகன் புருஷோத்தமன் லாபத்தை விட தரத்தை தாங்கள் முக்கியமாகக் கருதுவதால் திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்டம் இடங்களில் இருந்து  சுத்தமான பாலை தினமும் நள்ளிரவிலும், பிற்பகலிலும் ரயில் மூலம் கொண்டுவரச் செய்வதாகக் கூறுகிறார். 

மேலும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவையும் பானங்களின் சுவைக்கு மேலும் சுவை சேர்க்கின்றன. மேலும் 2013-ஆம் ஆண்டு விலையிலேயே தாங்கள் விற்பதாகவும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை தங்களை பாதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.