ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை அழித்துக்கொண்ட அண்ணாச்சி ராஜகோபால்! இனியாவது ஜோதிடத்தை நம்பாதீங்க!

எந்த ஜோதிடத்தையும் நம்பாமல், எந்த கடவுளையும் நம்பாமல், தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் உயர்ந்தவர் ராஜகோபால் அண்ணாச்சி.


கடை வாசலில் படுத்துக்கிடந்த அண்ணாச்சியின் உழைப்புக்கு, காலம் மிகப்பெரிய வெகுமதி கொடுத்தது. உலகமே வியந்துபார்க்கும் சாதனையாளராக உருமாறினார். தன்பிறகுதான் அவருக்கு வந்தது பக்தியும், ஜோதிட ஆர்வமும். ஏற்கெனவே இரண்டு பேரை திருமணம் செய்திருந்தார் ராஜகோபால் அண்ணாச்சி. இந்த நிலையில் யாரோ ஒரு ஜோதிடர் சொன்னார் என்று மூன்றாவது ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அப்போது வந்து சேர்ந்தவர்தான் ஜீவஜோதி.

மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஜீவஜோதியை கணவனிடம் இருந்து பிரித்து திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அந்த விவகாரத்தில்தான் சறுக்கி விழுந்தார். தன்னுடைய கையாட்கள் மூலம், சாந்தகுமாரை தட்டிவைக்கச் சொன்னார், அங்கே காத்திருந்தது அண்ணாச்சியின் விதி. அவர்கள் சாந்தகுமாரின் கதையை முடித்தார்கள்.

அதன்பிறகு அண்ணாச்சி சந்தித்தது அத்தனையும் அவமானங்கள், வேதனைகள். அவர் கட்டிய கோயிலோ, அவர் வணங்கிய சாமியோ, அவர் நம்பிய ஜோதிடமோ அவருக்கு கை கொடுக்கவில்லை. மருத்துவமனையில் மரணத்தை தழுவி விட்டார். ஜோதிடர் சொன்னபடி நடந்துகொண்டால், இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்பிய ராஜகோபால்தான், ஜோதிட பைத்தியங்களுக்கு ஒரு முன்னுதாரணம். இனியாவது ஜோதிடர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாமே.