அனிதா மரணத்தை கொண்டாடியதுதான் நீட் தற்கொலைக்குக் காரணமா? மனநல மருத்துவர் சொல்றதைக் கேளுங்க!

அனிதா மறைந்த சுவடு காய்வதற்குள் இந்த ஆண்டு இன்னமும் இரண்டு சருகுகள் மறைந்துவிட்டன. திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீயும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யாவும் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தையும் தினகரனும், ஸ்டாலினும் அரசியலாக்குகிறார்கள்.


எந்த ஒரு காரணம் என்றாலும் தற்கொலையை யாரும் ஏற்கவே முடியாது. மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுத முடியும், மீண்டும் +12 தேர்வு எழுதமுடியும் எனும்போது, எதற்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று மனநல மருத்துவர் டாக்டர் பதூர் மொய்தீனிடம் கேட்டோம்.

‘‘மாணவர்கள் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பது பெற்றோரும், ஆசிரியரும்தான். அவர்கள் மாணவர்களின் தகுதி அறிந்து படிக்க வைப்பதில்லை. மற்ற மாணவர்களைப் போன்று நமது பிள்ளையும் நூறு மதிப்பெண் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால், படிப்பு வருகிறதோ இல்லையோ டாக்டராக வேண்டும் என்று ஆசை காட்டி வளர்க்கிறார்கள். டாக்டர் ஆகியே தீரவேண்டும் என்று நெருக்கடி கொடுத்து மன அழுத்தத்தை உருவாக்குகிறார்கள்.

ஆசிரியர்களிடமும் தவறு இருக்கிறது. இந்தத் தேர்வுதான் உன் வாழ்க்கையை மாற்றப் போகிறது, இதில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிடுவாய் என்று சொல்லி மிரட்டுகிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிரட்டுகிறார்கள் என்றாலும், அதுதான் உண்மை என்று மாணவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் தோல்வி, குறைந்த மதிப்பெண் என்றால், இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லை என்று நினைத்து தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள்.

இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு மாணவி, அப்படியே அனிதாவைப் போன்று தற்கொலை செய்திருக்கிறார். அனிதாவை தமிழகமே தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியது. அது, அந்தப் பெண்ணின் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அதனால், அதே பாணியில் தற்கொலை செய்துகொண்டார். அதனால்தான், தற்கொலை பற்றி செய்தி வெளியிடும்போது மிகவும் ஜாக்கிரதையாக செயல் பட வேண்டும். 

அதனால்தான் முத்துக்குமார் மரணத்தைத் தொடர்ந்து நிறைய பேர் தற்கொலை செய்தார்கள். இனியாவது, இந்த தற்கொலை எல்லாம் அபத்தம் என்றுதான் அரசியல் தலைவர்கள் பேச வேண்டும், அதுதான் சரியான தீர்வு’’ என்கிறார்.

உண்மைதான்.