அனில் அம்பானி ராஜினாமா நிராகரிப்பு..! கழுத்தைப் பிடிக்கும் கடன்காரர்கள்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியின் ராஜினாமாவை நிராகரித்துள்ளனர் அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள்.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட். ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக. ஜிஎஸ்எம்,சிடிஎம்ஏ வகை அலைபேசி சேவைகள், இணையம் மற்றும் இணையவழி தொலைக்காட்சி சேவைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் வரையிலான நிதியாண்டின் முடிவுகளின் படி இந்த நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 18 ஆயிரம் கோடி எனவும். அதேவேளையில் மொத்த கடன் மதிப்பீடு சுமார் 50 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.  இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாங்கியுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த திவால் நிலைக்கு பொறுப்பேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் அனில் அம்பானி, மற்றும் அதன் நிர்வாக இயக்குநர்களான ரைனா கரணி, சாயா விரணி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சார் ஆகிய நான்கு பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்திருந்தனர். 

இதேவேளையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குழு கடந்த 20ம் தேதி மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்.. 

அனில் அம்பானி மற்ற இயக்குநர்களின் ராஜினாமாவை நிராகரித்துள்ளதாகவும், RCOM நிர்வாக இயக்குநர்களாக தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து செயல்படுத்தவும், நிறுவனத்தின் வீழ்ச்சியை சமாளிக்க புதியதொரு திட்டங்களை வழங்க நிறுவனத்தின் புதிய நிர்வாக குழுவிற்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களின் அறிக்கையின்படி. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக குழுவினரின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று RCom இன் இயக்குநர்களிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், RCom இயக்குநர்களாக தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து செய்ய அறிவுறுத்தப்படுத்தும் அதேவேளையில் புதிய சீரமைப்பு குழுவினருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

2019 செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் 30,142 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக மும்பை பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனம் ரூ .50,921 கோடி இழப்பினையும். ஏர்டெல் நிறுவனம் சுமார் 2,866 கோடி இழப்பையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005 ஆம் ஆண்டு அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே சொத்துக்கள் பிரிக்கப்பட்ட பின்னர். அனில் அம்பானி Rcom நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

ஒரு காலத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்த அனில் அம்பானி. தற்போது தனது கம்பெனியின் கடன் தொகையை கட்ட கூட முடியாமல் போராடி வருகிறார்.

 மணியன் கலியமூர்த்தி