வேலைக்கார மூதாட்டி சடலத்தை தோளில் சுமந்து சென்ற போலீஸ் உயர் அதிகாரிகள்! நெகிழ வைக்கும் காரணம்!

கணவரை இழந்து 40 ஆண்டுகளாக காவல் நிலையத்தில் எடுபிடி வேலைகள் செய்து வந்த பெண் உயிரிழந்ததை அடுத்து போலீசார் அவருக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


40 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த பெண் ஒருவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாதேபள்ளி காவல்நிலையத்திலேயே தங்கி போலீசாருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். அவருடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஏன் எனில் அவரால் பேச முடியாது.

அதனால் போலீசாரே அவரை முகம்மா என அழைக்க ஆரம்பித்தனர். பெண் காவலர்கள் விடுமுறை எடுக்கும் போது, சிறையில் இருக்கும் கைதிகளை முகம்மா கவனித்துக் கொள்வார் . 

கடந்த 40 ஆண்டுகளாக வேலை செய்து வந்த முகம்மா வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதை அடுத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் சேர்ந்து பணம் வசூலித்து முகம்மாவை நல்லடக்கம் செய்துள்ளனர். இந்த காவல் நிலையத்தில் ஆரம்பத்தில் பணி புரிந்தவர்கள் தற்போது டி.எஸ்.பி. அளவுக்கு உயர்ந்துள்ளனர். அவர்களும் முகம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளது.

தனது கடைசி மூச்சு வரை காவல் நிலையத்திலே பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நல்லடக்கம் செய்தது மனித நேயம் சாகவில்லை என்பதை நம்முடைய புத்திக்கு எட்டும் வகையில் காலிங் பெல் அடித்து சொல்லி விட்டு சென்று விட்டது போல இருந்தது.