படித்தது வெறும் 8ம் வகுப்பு! தற்போது ரூ.1201 கோடிக்கு அதிபதி! மிரள வைக்கும் எம்எல்ஏவின் சொத்து மதிப்பு! யார் தெரியுமா?

பெங்களூரு: 8ம் வகுப்பு படித்த எம்எல்ஏ ஒருவர் ரூ.1201 கோடி மதிப்புள்ள சொத்துகளை அசால்டாக கையாண்டு வருகிறார்.


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். முந்தைய முதல்வர் குமாரசாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவருக்கு  பாஜக பெயரில் அதிர்ஷ்டம் அடித்தது. ஆம், குமாரசாமி அமைச்சரவையை எதிர்த்து, நாகராஜ் உள்ளிட்ட 17 எம்எல்ஏ.,க்கள் திடீரென ராஜினாமா செய்யவே, பெரும்பான்மை இழந்த குமாரசாமி (காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ) முதல்வர் பதவியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பெரும்பான்மையை நிரூபித்த பாஜக ஆளுநர் அனுமதியுடன் தற்போது ஆட்சி அமைத்துள்ளது.  

இதில், பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்களுக்கு பாஜக சார்பாக பெரும் தொகை பேரம் பேசப்பட்டது. இதில், நாகராஜ்க்கு மட்டும் ரூ.48 கோடி வங்கிக்கணக்கில் ஒரே நாளில் டெபாசிட் செய்யப்பட்டது. அத்துடன், நாளுக்கு நாள் கிடைத்த பல கமிஷன்களின் விளைவாக, தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1201 கோடியாக உயர்ந்துள்ளது.

அத்துடன் தனியாக சொந்த விமானம் ஒன்றையும் அவர் கொண்டுள்ளார். இதெல்லாம் எப்படி வெளியே தெரியவந்தது என்று கேட்கிறீர்களா, ராஜினாமா செய்த 17 எம்எல்ஏ.,க்களின் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாகராஜ் பாஜக சார்பாக ஒசக்கோட்டை தொகுதியில் களம் இறங்குகிறார். இதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில்தான் மேற்கண்ட விவரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.  

குமாரசாமி அணியில் இருந்தபோது செல்லாக்காசாக இருந்த நாகராஜ் போன்ற 17 பேர் சில மாதங்களிலேயே பாஜக.,வுக்கு ஆதரவு அளித்ததன் மூலமாக பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.