வாழ்க்கை ஒரு வட்டம்! இன்ஸ்பெக்டராக இருந்தவருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி! ஏன் தெரியுமா?

காவல் ஆய்வாளராக இருந்து பின்னர் ஒய்.எஸ்.ஆர். கான்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவரும், அவரது மேலதிகாரியும் ஒருவருக்கொருவர் வணக்கம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோரண்ட்லா மாதவ். சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த இவருக்கு ஹிந்துப்ப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 

ஆனால் காவல்துறையை விட்டு விட்டு அரசியலில் கால் வைப்பது தொடக்கத்தில் மாதவுக்கு எளிதானதாக இல்லை. அவரது ராஜினாமாவை காவல்துறை மேலிடம் ஏற்க மறுத்ததால்  அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தத்து. இதையடுத்து மாநில நிர்வாகத்தீர்ப்பாயம் தலையிட்டு அவரது ராஜினாமாவை ஏற்க காவல் துறைக்கு உத்தரவிட்டது. மேலும் அரசியல் கட்சிகளின் வன்முறை வம்புகள் வழக்குகள் அனைத்தையும் அவர் சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில் அண்மையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்தவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாதவ் , 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்திருந்த மாதவும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவரது முன்னாள் மேலதிகாரியான சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளர் மகபூப் பாஷாவும் ஒருவருக்கொருவர் நட்புரீதியான புன்னகையுடன் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

தனது மேலதிகாரி என்ற முறையில் தான் அவருக்கு வணக்கம் செலுத்தியதாகவும், எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற முறையில் அவரும் தனக்கு வணக்கம் தெரிவித்ததாகவும் மாதவ் தெரிவித்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.