நேற்று வரை சல்யூட் அடித்தவர் முன்பு கைகளை உயர்த்தி நின்ற நாயுடு! எல்லாம் சில காலம்! வைரல் புகைப்படம்!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விமான நிலையங்களில் பிற சாதாரணப் பயணிகளைப் போன்று கடும் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன.


ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராகவும், அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த ஹை புரொஃபைல் முதலமைச்சராகவும் வலம் வந்தவர் சந்திரபாபு நாயுடு. பின்னர் ஆந்திரா இரண்டாகப் பிரிந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் கடுமையாக மோதிக்  கொண்ட சந்திரபாபு  நாயுடு பா.ஜ.க.வின் முதல் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தார். 

இந்நிலையில் தேர்தலில் கடும் தோல்வியைச்  சந்தித்த அவர், ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார். இதையடுத்து மாநிலத்தில் அவருக்கான மரியதை வெகு கீழிறங்கியிருக்கிறது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட போதிலும் விமான நிலையங்களில் அவரது வாகனம் ஓடுபாதை வரை அனுமதிக்கப்படுவதில்லை.

பிற பயணிகள் போன்று பேருந்து மூலமே விமானம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் வி.ஐ.பி. நுழைவு வாயில் வழியாக செல்லவும் அனுமதிக்கப்படவில்லை பிற பயணிகள் போன்று பொது நுழை வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டு அவர் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. 

முதலமைச்சராக இருந்த வரை சகலத்தையும் அனுபவித்த ஒருவர் அதனை இழந்த பிறகு என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதற்கு சந்திரபாபு நாயுடு உதாரணம் ஆகியுள்ளார். அதே சமயம் முன்னாள் முதலமைச்சர்கள் பலரும் சலுகைகளை அனுபவித்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் அது மறுக்கப்படுவது ஏன் என்கிற கேள்வியை தெலுங்கு தேசம் எழுப்பியுள்ளது.

மோடியை கடுமையாக எதிர்த்தார் என்கிற காரணத்திற்காகவே சந்திரபாபு நாயுடு இப்படி அவமதிக்கப்படுவதாகவும் தெலுங்குதேசம் கூறியுள்ளது. ஆனால் பாஜக இதனை உடனடியாக மறுத்துள்ளது. முதலமைச்ச்ர பதவியில் இல்லாத ஒருவருக்கு என்ன சோதனை செய்யப்படுமோ அதைத்தான் சந்திரபாபுவுக்கு அதிகாரிகள் செய்துள்ளதாக கூறினார்.