தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு தண்டனை கொடுத்து அவரை அவமானப்படுத்தியதாக அன்புமணி மீது புகார் எழுந்துள்ளது.
பொது மேடையில் அன்புமணி கொடுத்த பனிஸ்மென்ட்! அவமானத்தில் தலைகுனிந்த அதிமுக வேட்பாளர்! ஆரணி பரபரப்பு!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்றார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்தது முதலே அன்புமணி சிடுசிடுவென இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் அன்புமணி என் முகத்தில் ஆரணி பொதுக்கூட்டத்தில் கோபம் தாண்டவமாடியது. இதனால் தன்னுடைய உதவியாளர்கள் மட்டுமல்லாமல் கட்சியினரிடம் கூட அன்புமணி முகத்தைக் காட்டிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அன்புமணி மேடையில் பேச ஆரம்பித்தார். அப்போது அதிமுக வேட்பாளரும் தற்போதைய ஆரணி எம்பியுமான செஞ்சி சேவல் ஏழுமலை நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கடும் கோபமடைந்த அன்புமணி உங்களுக்கு பிரச்சாரம் செய்ய இங்கு நான் வந்து நின்று கொண்டிருக்கிறேன் நீங்கள் சேரில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களா என்று கடும் கோபத்துடன் கேட்டார். இதனால் ஒரு கணம் ஆடிப் போன ஏழுமலை சேரில் இருந்து எழுந்து அன்புமணி அருகே ஓடி வந்தார்.
ஆனாலும் கூட அன்புமணியின் கோபம் அடங்கவில்லை. நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வெயிலில் நின்று நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் உங்களுக்காக இவ்வளவு தொண்டர்கள் வெயிலில் காத்துக்கொண்டிருக்கின்றனர் நீங்கள் நிழலில் அமர்ந்து கொண்டு இருக்கிறீர்களா என்று மூஞ்சிக்கு நேராக ஏழுமலையிடம் அன்புமணி கேட்டுவிட்டார். அது மட்டுமல்லாமல் இன்னும் பத்து நாட்களுக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நீங்கள் உட்காரவே கூடாது என்று ஏழுமலைக்கு தண்டனையும் கொடுத்தார்.
இதனால் அவமானம் அடைந்த ஏழுமலை முகம் சுருங்கி தலைகுனிந்தார். இத்தனை களேபரங்களும் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையிலேயே நடந்தேறியது. அதிமுக வேட்பாளர் ஒருவரை பாமக அன்புமணி மேடையில் வைத்து அவமானப்படுத்தியது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.