அன்பழகன் எனும் 97 வயது இளைஞன்... என்றும் கலைஞரின் தோழன். உடன்பிறப்புகளின் ஆசிரியன்.

எப்போதும் நம்பர் 2 என்ற இடமே நிரந்தரம், அதுவே போதும் என்ற நிம்மதியான மனநிலையில் வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன். அவரது பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கும் தெரியுமா?


தமிழரின் தொன்மம், தமிழ் மொழியின் செழுமை பற்றிப் பேசிவிட்டு, அப்படி வளமான மரபுடன் இருந்த தமிழன் எதையெதை தற்போது இழந்திருக்கிறான் என்றும் திராவிட இயக்க உணர்வு நீதிக்கட்சி காலத்திலிருந்து எதனால் உருவாகி வளர்ந்ததைப் பற்றியும், பெரியார், அண்ணாவின் செயல்பாடுகள் பற்றியும் விளக்கிவிட்டு, இன்றுள்ள தலைமுறை அந்த உணர்விலிருந்து எப்படி விலகிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே அவருடைய பேச்சின் மையம் இருக்கும்.

கிண்டலாக, கேலியாக, நகைச்சுவையாக பேசுவார் கலைஞர் கருணாநிதி. ஆனால், பேராசிரியர் அன்பழகனின் பேச்சிலோ நகைச்சுவை குறுக்கிடாத சீரியஸான தன்மை இருக்கும். மொழி, இன உணர்விருக்கும். நிறையப் புள்ளிவிபரங்களில் பேச்சிற்கிடையில் பரவிக்கிடக்கும். தனக்கு முன்னால் இருக்கும் பார்வையாளர்களை மாணவர்களைப் போல எண்ணி, அவர்களை அடுத்த தளத்திற்குப் பேச்சின் வழியே அழைத்துச் செல்வதைப் போலிருக்கும்.

திராவிட இயக்கத்துக்காக சிறைக்குப் போவதையோ, மறியலில் ஈடுபடுவதையோ கடமையாகச் செய்கிற உணர்வை தொண்டர்களிடம் வளர்த்தெடுத்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் அன்பழகன். பதவி வேண்டும் என்று யாரையும் கேட்காதே, எது கொடுக்கப்படுகிறதோ அதை ஏற்றுக்கொள் என்று வாழ்ந்து காட்டியவர்.

ஒருபோதும் பரபரப்புக்காக பேசியவர் அல்ல அன்பழகன். அது மட்டுமல்ல, அடுத்து தி.மு.க.வில் என்ன நடக்கும் என்பதை இவர் வாயில் இருந்து யாரும் முன்கூட்டி அறிந்துகொள்ளவே முடிந்தது இல்லை. அழகிரி தகராறு, மாறன் சகோதரர்கள் தகராறு போன்ற நேரங்களில் கருணாநிதி தேடிவந்து ஆலோசனை கேட்டது இவரிடம்தான்.

அன்பழகன் பெயரில் வரும் அறிக்கை எல்லாமே அவர் விடுவது இல்லை, ஏன் அவருக்குத் தெரிவதும் கூட இல்லை. ஆனாலும், அதுகுறித்து கொஞ்சமும் அலட்டிக்கொண்டது இல்லை அன்பழகன். ஆம், நிறைகுடம் ஒரு போதும் தழும்பாது.