புத்தக கண்காட்சி குளறுபடி, அன்பழகன் கைதினால் உடைகிறதா சங்கம்..?

இத்தனை ஆண்டுகளும் புத்தக கண்காட்சி எந்தக் குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக நடந்துகொண்டு இருந்தது.


இந்த நிலையில், அரசுக்கு எதிரான நூல்களை விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று அன்பழகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சங்கம் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் உதவித்தலைவர் நாகராஜன் எழுதியிருக்கும் கடிதம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

அந்தக் கடிதத்தில், ‘நடைபெற்றுக்கொண்டிருக்கும் 43 ஆவது புத்தகக் கண்காட்சியிலிருந்து ஒரு பங்கெடுப்பாளரை, அவர் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளார் என்பதைக் காரணமாய்க் கூறி அவருக்கு கடிதம் அளிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை ஏற்புடையதல்ல. புத்தகங்களைத் தடைசெய்வது என்பதே இந்த ஜனநாயக யுகத்தில் ஏற்புடையதல்ல என்றாலும் பப்பாசியின் விதிமுறைகளின்படி அரசாங்கத்தால் சட்டப்படி தடை செய்யப்பட்ட புத்தகங்களை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யக் கூடாது என்பதே பங்கு பெறும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஷரத்து ஆகும். எனவே அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. 

அத்தோடு இது போன்ற அடிப்படையான கொள்கை மற்றும் உரிமைப் பிரச்சனையில் முழுமையான நிர்வாகக் குழுவைக் கூட்டியே முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கோரியிருக்கிறார்.

ஆக, இந்த கண்காட்சி முடிவதற்குள் சிக்கல் அரங்கேறிவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அன்பழகன் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் நூல் அரசால் தடை செய்யப்படவில்லை. எனவே அதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் அல்ல. பபாஸி அரசுடனான தனது உறவு பாதிக்கப்படும், அரசின் பகைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாலேயே அன்பழகனை வெளியேற்றியுள்ளது.

இது தவறு என்பதுதான் அத்தனை பேரின் கருத்தும். சிக்கல் ஆரம்பமாயிடுச்சு குமாரு.