ஜார்கண்ட் மாநிலத்தை கைப்பற்ற அமித்ஷா அதிரடி! கூட்டணி குஷியில் ராகுல் காந்தி!

மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பா.ஜ.க.வை மிகப்பெரும் சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. அதனால், எப்படியாவது ஜார்கண்ட் மாநிலத்தை கைப்பற்றியே தீரவேண்டும் என்று அமித்ஷா தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.


ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்பது டிசம்பர் 23-ம் தேதி தேர்தல் எண்ணிக்கை முடிவில் அறிவிக்கப்படுகிறது.

ஆளும் பாஜக கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இப்போது தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதாதளம், ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. அந்த கட்சிகளை சமாதானம் செய்வதற்கு பா.ஜ.க. எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால் எதிர்க்கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அமித்ஷா. அவர் பேசுகையில், ‘‘ஜார்கண்டை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவே இல்லை. நீண்ட காலமாக பழங்குடியினர் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

மக்களின் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து தனி மாநிலமாக்கியது வாஜ்பாயின் பா.ஜ.க. அரசுதான். நாட்டை பிரதமர் மோடி வெகுவேகமாக முன்னேற்றி வருவது போன்று முதல்வர் ரகுபர் தாஸ் ஆட்சிக்காலத்தில் ஜார்கண்ட் மாநிலம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி நீடிக்கும்’’ எனக் கூறினார்.

ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜார்கண்ட் தேர்தலுக்கு ராகுல் காந்தி கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால், ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், ஜிதின் பிரசாதா, தாரிக் அன்வர், அசோக் கெலாட் உள்ளிட்ட 40 தலைவர்கள் செல்கிறார்கள். 

அயோத்தி விவகாரத்தைச் சொல்லி ஓட்டு வாங்கிவிட முடியும் என்று அமித்ஷா நினைக்கிறார். அதேநேரம் ஆளும் கட்சியின் மீது இருக்கும் அதிருப்தியை தன்னுடைய கூட்டணி பலத்தால் வீழ்த்திவிட முடியும் என்று ராகுல் நம்புகிறார். அதனால் காங்கிரஸ் கூட்டணி செம குஷியில் பிரசாரம் செய்துவருகின்றனர்.