அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இன்று அறிவிப்பு! தனி விமானத்தில் இன்று சென்னை வருகிறார் அமித் ஷா!

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை அறிவிக்க அமித் ஷா இன்று தனி விமானத்தில் சென்னை வருகிறார்.


தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.கவுடன் இணைந்து சந்திக்க பா.ஜ.க முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் சென்னை வந்த பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அமைச்சர் தங்கமணியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கினார்.

இதனை தொடர்ந்து தொலைபேசி வாயிலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தேர்தலை இணைந்து சந்திப்பது என்று அ.தி.மு.க – பா.ஜ.க தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். கூட்டணியில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு எத்தனை இடங்கள் என்பது கூட இறுதியாகிவிட்டது.

கூட்டணியை அறிவிக்க பா.ஜ.க தலைவர் அமித் ஷா சென்னை வருவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க – சிவசேனா கூட்டணியை இறுதி செய்துள்ள அமித் ஷா இன்று சிறப்பு விமானத்தில் சென்னை வருகிறார்.

அவருடன் பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியுஸ் கோயலும் சென்னை வருகிறார். சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்து கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா வெளியிட உள்ளார். அறிவிப்பின் போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ்., முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ் ஆகியோரும் உடன் இருப்பார்கள்.

இதனிடையே அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., தே.மு.தி.க., புதிய நீதி கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சியின் நிர்வாகிகளும் இன்று அமித் ஷா முன்னிலையில் கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக கூறுகிறார்கள். யாருக்கு எத்தனை இடங்கள் என்பது நாளை அறிவிக்கப்படாது. மாறாக அடுத்த வாரம் அறிவிக்கப்படும். கூட்டணியை மட்டும் அமித் ஷா உறுதிப்படுத்திவிட்டு செல்வார் என்கிறார்கள்.