ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நவீன மாற்றங்ளுக்கு முன்னோடி நாட்டில் அதிசயமாக வாழ்ந்து வருகிறது ஒரு இனக்குழு.
மின்சாரம், செல்போனுக்கு தடை! படிப்பு இல்லை! விவசாயம் மட்டும் தான்! ஓஹோ என வாழும் மக்கள்!

அமெரிக்க நகரங்களின் வழக்கமான ஆடம்பரங்களுக்கு இடையே காணவேண்டிய மிக எளிமையான சுவாரஸ்யங்களும் இருக்கத் தான் செய்கின்றன. அதில் முக்கியமானது ஆமிஷ் மக்களின் வாழ்க்கை முறை. தீவிர கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் ஆமிஷ் மக்கள் பென்ஸில்வேனியா, ஒஹையோ, இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் அதிக அளவு வசிக்கின்றனர்.
பைபிளில் குறிப்பிட்டிருப்பதைத் தவறாமல் பின்பற்றுவதும், அதில் கூறப்படாத எதையும் ஏற்றுக்கொள்ளாததுமே இவர்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. பைபிளில் சொல்லப்படாத அறிவியல் விளைவுகளான் மின்சாரப் பொருட்கள் பெட்ரோல் வாகனங்கள், செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றுக்கு இவர்களது வாழ்க்கையில் இடமேயில்லை.
1690-களில் ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்த கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினர் சக மக்கள் கிறிஸ்துவ மதத்தை சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி தனியாக பிரிந்துசென்றனர். ஜேகோப் அம்மான் என்பவர் தலைமையிலான அந்தமக்கள் தான் ஆமிஷ் என்ற பெயரைப் பெற்றனர். 18-ம் நூற்றாண்டில் போர், பஞ்சம், வேலை தேடுதல் போன்ற பல காரணங்களுக்காக அமெரிக்காவில் குடியேறி வாழத் தொடங்கினர்.
இவர்களின் பிள்ளைகள் இவர்களே நடத்தும் பள்ளியில் 8-ம் வகுப்புவரை மட்டும் படிக்கின்றனர். 16 வயதிலேயே வேளாண்மை, குதிரை வளர்த்தல், தச்சுத் தொழில், இரும்புப் பட்டறை போன்ற தொழில் கல்வியைக் கற்றுக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கிவிடுகின்றனர்.
இது பற்றி அவர்களிடம் கேட்டால் 8-ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு விவசாயம் பார்க்கும் தங்கள் குழந்தைகள் அதிகம் படிக்கும் மற்ற இனத்துக் குழந்தைகளை விட நன்கு பொருளீட்டி அவர்களது நிலங்களையும் விலைக்கு வாங்கிவிடுவார்கள் என்கின்றனர் ஆமிஷ் மக்கள்.
விவசாயத்துக்காக டிராக்டர்களைப் பயன்படுத்துவது இல்லை. குதிரைகளைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கின்றனர். ஆண்கள் கறுப்பு நிறத்திலும், பெண்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலும் எளிமையான உடைகளை அணிகிறார்கள். பளீர் வண்ணங்களும் வடிவங்களும் உடைகளில் இருந்தால் அது அந்தத் தனிநபர் பற்றிய கவன ஈர்ப்புக்குக் காரணமாக அமைகிறது.
எந்த ஒரு தனிமனிதரையும் உயர்த்தியோ தனித்தோ காட்டக்கூடாது என்பதற்காகத்தான் உடை விதிமுறையாம். உண்மையில் இவர்களைப் போன்றவர்களால் தான் இந்த பூமிக்கு நல்ல காலம் பிறக்கும். தொடர்ந்து இவர்கள் இப்படியே வாழ நாமும் வாழ்த்தலாமே.