கொரோனாவில் சிக்கி சீரழிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரம்... அடுத்து நடக்கப் போவது என்ன?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன. சுமார் 53 ஆயிரம் பேருக்கு மேல் மரணமடைந்துள்ளதால் கொரோனா வைரஸால் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் உலகின் மிகப் பெரிய மற்றும் வலுவான பொருளாதாரம் என அறியப்படும் அமெரிக்க பொருளாதாரம் கொரோனா வைரஸால் சின்னாபின்னமாகிப் போயுள்ளது.


அங்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ளதால் அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் முடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67% பங்களிப்பு கொண்ட நுகர்வோர் செலவினங்கள் கடந்த காலாண்டில் மட்டும் 7.6% அளவுக்கு சரிந்துள்ளது. மேலும் நாட்டின் ஏற்றுமதி 15 சதவிகிதம் இறக்குமதி 8 சதவிகிதம் என மொத்த சேவைத் துறையும் 30 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 4.8 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் பல்வேறு தரக்குறியீட்டு நிறுவனங்களால் எதிர்பார்க்கப்பட்ட 3.8% வீழ்ச்சியை விட இது அதிகம் என்று கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் அமெரிக்க பொருளாதார ஆலோசகர்கள்.

மேலும் 2020 காலண்டர் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் சுமார் 5.5 சதவிகிதம் அளவுக்கு சரியலாம் எனவும் கணித்து இருக்கிறது மார்கன் ஸ்டான்லி தரக்குறியீட்டு நிறுவனம். இந்த 5.5 % சரிவு என்பது அமெரிக்க பொருளாதார வரலாற்றில் 1946-ம் ஆண்டுக்குப் பின் காணப்போகும் மிகப் பெரிய வீழ்ச்சி என்று கணிக்கப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் கூட, அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதம் என்கிற அளவிலேயே வீழ்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஒரே ஆண்டில் 5.5 சதவிகிதம் வீழ்ச்சியை காணப்போகிறது என்பதால் எதிர் வரும் அதிபர் தேர்தலில் இது கடுமையாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது கடந்த 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி என்று கூறுகின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.

ஏற்கனவே அங்கு 2 கோடியே 60 லட்சம் பேர் வேலையின்மை காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகளுக்காகவே அமெரிக்க ஃபெடரல் வங்கி குறிப்பிட்ட தொகையை‌ ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்துறை உற்பத்தி குறைவு சில்லறை விற்பனை முடக்கம் என அனைத்து வணிக சேவைகளும் முடங்கியுள்ளதால் இந்த பொருளாதார மந்தநிலை இன்னும் இரண்டு காலாண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பெரும் மந்தநிலையைத் தொடர்ந்து அந்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை சீரமைக்க அங்குள்ள பொருளாதார நிபுணர்கள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

மணியன் கலியமூர்த்தி