உயிருக்கு போராடும் மரங்கள்! காப்பாற்ற வரும் ஆம்புலன்ஸ்! சென்னை அதிசயம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் துவக்கம்.


இந்தியாவிலேயே முதன் முறையாக மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் துவக்கி வைத்தார்.  புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மரங்களை பாதுகாக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் புயல், வெள்ளம்  போன்ற பேரிடர் காலங்களில் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்துதல், புதிய மரங்களை நடுதல், விதைப் பந்துகள் வினியோகித்தல், மரங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆம்புலன்ஸ் சேவை மூலம் SASA குழுமம் வழங்க இருக்கிறது. பசுமை மனிதர் டாக்டர் அப்துல் கனி வழிகாட்டுதலில் இந்த மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை வழங்க உள்ளனர்.

மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை மூலம் புதிய மரக்கன்றுகள் நடுதல், விதை வங்கி, மரக்கன்றுகள் இலவசமாக வழங்குதல், மரம் நடுவதற்கான உதவிகள் புரிதல், மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பதியமிடுதல், மரங்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்தல் என்று எண்ணற்ற பசுமைப் பணிகளை மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை மூலம் வழங்க உள்ளது. ஆம்புலன்ஸ் சேவையை பெற 9941006786 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது www.tree ambulance.org இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் மரங்களை நடுவதில் பயிற்சி பெற்றவர்கள், மரம் நடும் உதவியாளர்கள் ஆகியோர் மரங்களை நடுவதற்கான, பராமரிப்பதற்கான உபகரணங்களுடன் பயணம் செய்வார்கள்.

"இந்த திட்டத்தின் மூலம்  அழியும் நிலையில் உள்ள மரங்களை பாதுகாக்கவும், பராமரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு, காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. பசுமையை பாதுகாப்பதன் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசு படுவதை தடுக்கவும் முடியும்" என்று SASA குழும நிறுவனர் சுரேஷ் கிருஷ்ணா ஜாதவ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "அடுத்த கட்டமாக மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடுவதற்காக நவீன உத்திகளை கையாள இருப்பதாக தெரிவித்துள்ளார். டிசம்பர் முதல் இந்த நவீன  சேவை தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துவதும், தன்னார்வலர் குழுக்களை ஏற்படுத்தி பசுமை போர்வைக்கு வித்திடுவதும் SASA குழுமத்தின் நோக்கம் என்று சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.