பந்தை எரிவதாக புகார்! அம்பதி ராயுடுவுக்கு விரைவில் தடைஸ

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு, விதிமுறைகளை மீறிய வகையில், பந்துவீசுவதாக, புகாரில் சிக்கியுள்ளார்.


33 வயதாகும் அம்பதி ராயுடு, ஐபிஎல் போட்டிகளின் மூலமாக, பிரபலம் ஆனவர். அதைத்தொடர்ந்து, படிப்படியாக முன்னேறி, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தற்போதைய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

அங்கு, ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சாதனையும் படைத்துள்ளது. இதையடுத்து, ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு, 5 விக்கெட்களை இழந்து, 288 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல், 9 விக்கெட்களை பறிகொடுத்து, 254 ரன்களில் தோல்வியை தழுவியது. இதற்கு பேட்டிங் சரியில்லை, பந்துவீச்சு சரியில்லை என பல காரணங்கள் இந்திய அணி மீது கூறப்பட்டு வருகிறது. 

இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்திய வீரர் அம்பதி ராயுடு விதிமுறைகளை மீறிய வகையில், பந்து வீசுவதாக புகார் எழுந்துள்ளது. வலது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், நேற்றைய போட்டியில் 2 ஓவர்கள் வீசி, 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். அப்போது, அவர் பந்து வீசிய விதம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக, புகார் கிளம்பியது.  இதன்பேரில், அவர் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஐசிசிக்கு ரிப்போர்ட் செய்தும் உள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’அம்பதி ராயுடுவின் பந்து வீச்சு பாவனை பற்றிய புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ஐசிசி விதிமுறைகளின்படி, அவர் 14 நாட்களுக்கு, ஐசிசி பார்வையாளர்களின் முன்னிலையில் பந்து வீசும் பரிசோதனையில் பங்கேற்க வேண்டும். அப்போது அவர் பந்து வீசுவது பற்றிய காட்சிகளை பதிவு செய்து, விசாரித்து முடிவுகளை அறிவிப்போம். அதுவரையிலும், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து, தடை இன்றி பந்து வீசலாம்,’’ என்று கூறப்பட்டுள்ளது. 

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் போன்றவர்கள் ஏற்கனவே இத்தகைய பந்துவீச்சு முறைகேடு புகாரில் சிக்கி, பின்னர் மீண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.