அமேசான் காடுகள் பற்றி எரிகிறது? நாம் பிக்பாஸ் ரசித்துக்கொண்டு இருக்கிறோம்!

உலகில் மிகக்கொடுமையான பேரிடர் என்று சொல்கிறார்கள். ஆம், வெந்து தணிந்து கொண்டிருக்கிறது அமேசான் மழைக்காடு. இதைத்தான் மிகக் கொடூரமான இயற்கை விபத்து என்று சொல்கிறார்கள்.


இந்த கணத்தில் 4,500 காட்டுத்தீக்கள் தனித்தனியாக அங்கே நடனமாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு கால்பந்தாட்டத் திடல் அளவுள்ள இடம் கருகி காலியாகிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீயால் ஏற்பட்ட கரும்புகை 3,200 கி.மீ. அப்பால் உள்ள, பிரேசில் நாட்டின் சா பாலோ நகரத்தை முற்றுகையிட்டு வானத்தை கரும்கும்மென இருட்டாக்கி வைத்திருக்கிறது. 

கரிக்காற்று எனப்படும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிக் கொண்டு இதுநாள் வரை உயிர்க்காற்றை உலகுக்கு வழங்கி வந்த அமேசான் காடு, இப்போது தகதகவென எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இத்தனைக் காலமும் மரங்களுக்குள் உள்ளே சேகரித்து வைத்திருந்த கரிக்காற்று வெளியே வரத் தொடங்கியிருக்கிறது. அதுவும் 200 மெகா டன் கணக்கில்!

அமேசான் காடு, உலகின் மிகப்பெரிய மழைக்காடு. அதன் பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ. கிரேட் பிரிட்டனையும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் அயர்லாந்தையும் 17 முறை தூக்கி அமேசான் காட்டுக்குள் வைத்துவிடலாம். அந்த அளவுக்கு அது பெரிய காடு. அமேசான் காடு மட்டும் ஒரு தனிநாடாக இருந்தால் உலகத்தின் 9ஆவதுபெரிய நாடு அது!

உலகுக்கு 20 விழுக்காடு உயிர்க் காற்றைத் தரும் நுரையீரலான அமேசான் காட்டில் மழை விழுந்தால் மரத்தின் தலையில் விழுந்த மழைத்துளி, தரையைத் தொட 10 நிமிடம் வரை ஆகும். ஒரு விழுக்காடு சூரிய ஒளிதான் அமேசான் காட்டுக்கு உள்ளே நுழைய முடியும் அந்த அளவுக்கு அடர்த்தியான காடு. 

6 ஆயிரத்து 840 கி.மீ. நீளமுள்ள அமேசான் ஆறு, இந்த மழைக்காட்டுக்குள்தான் அனகோண்டா பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடுகிறது. பிரேசில், பெரு, கொலம்பியா உள்பட 9 லத்தீன் அமெரிக்க நாடுகளை தன் பச்சைக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்திருக்கும் காடு அமேசான் காடு. அமேசான் வடிநிலம் 40 ஆயிரம் வகை தாவரங்கள், 1,300 வகை பறவைகள், 3,000 வகை மீன்கள், 430 வகை பாலூட்டிகள், 25 லட்சம் வகை பூச்சிகளின் தாய்வீடு.

அது மட்டுமல்ல. 400 முதல் 500 வகையான 10 லட்சம் பழங்குடி மக்களின் தாயகம் அது. இதில் 50 வகை பழங்குடிகள் இதுவரை வெளியுலகத்தையே பார்க்காதவர்கள்.

இத்தகைய அருமையான தன்மைகள் கொண்ட அமேசான் காடு பற்றி எரிகிறது. உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இந்தத் தீயை அணைக்க தன்னால் இயன்ற உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளன. 

ஆனால், நம் நாடு மட்டும்தான் இப்போதும் சிதம்பரம் கைது பற்றியும் பிக்பாஸ் வீட்டு விவகாரம் பற்றியும் கதைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்கேயோ எரிவதற்கு நாம் எப்போதுதான் கவலைப்பட்டிருக்கிறோம்..?