ஒரு போலி ரிவ்யூவுக்கு 1500 ரூபாய்..! அமேசானில் ஏமாற்றப்படும் வாடிக்கையாளர்கள்..! வெளியான பகீர் தகவல்!

லண்டன்: அமேசானில் பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பலவும், காசு கொடுத்து, தங்களுக்குச் சாதகமான ரேட்டிங் வெளியிட்டு வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஆன்லைன் வர்த்தகத்தில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் அமேசான் நிறுவனத்தில் பொருள் வாங்க  விரும்புவோர், அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, அதில் தரப்படும் ரேட்டிங் அடிப்படையில் தாங்கள் விரும்பும் பொருட்களை தேடிப் பிடித்து ஆர்டர் செய்வது வழக்கம். இப்படியாக, அமேசானில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ரேட்டிங் தருவதற்காகவே ஒருசிலர் முழுநேர மோசடி வேலை செய்வதாக, பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் ஊடகம் கண்டுபிடித்துள்ளது.

ஆம், ஒரு குறிப்பிட்ட கட்டணம் அதாவது 15 யூரோக்கள் வரை செலவிட்டு, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தயாரிப்புகளுக்கு 4 முதல் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிக் கொள்வதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அமேசான் இணையதளம் சென்று, தொடர்புடைய நிறுவனத்தின் தயாரிப்பு பற்றி பாராட்டி கமெண்ட் வெளியிடுகிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. இப்படி போலி ரேட்டிங் தரப்படும் பொருட்களை, அமேசான் வெரிஃபைட் பர்சேஸஸ் என்ற கேட்டகிரியின்கீழ், அமேசான் நிறுவனம் விற்பனை செய்வதாக, டெய்லி மெயில் குற்றம் சாட்டியுள்ளது.  

உதாரணமாக, AMZTigers என்ற ஜெர்மனி நிறுவனம், அமேசான் பொருட்களுக்கு காசு வாங்கிக் கொண்டு ரேட்டிங் தருவதற்காகவே, பிரிட்டன் முழுக்க 3,000 வாடிக்கையாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அவர்கள், குறிப்பிட்ட கட்டணம் வாங்கிக் கொண்டு, சம்பந்தப்பட்ட பொருளை வாங்கி டெஸ்ட் செய்ததுபோல, 4 அல்லது 5 ஸ்டார் கொடுத்து, ஆன்லைனில் கமெண்ட் வெளியிடுவார்களாம். இதற்காக, அமேசானில் பொருள் விற்கும் நிறுவனங்கள் பிரத்யேக கட்டணத் தொகையை அந்த ஜெர்மனி நிறுவனத்திற்கு தருகிறார்களாம். இதே நடைமுறைதான் உலகம் முழுக்க உள்ள அமேசான் விற்பனையாளர்கள் பின்பற்றுகிறார்கள் என்றும், டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.  

இந்த செய்தியால் அமேசான் இணையதளத்தில் பொருள் வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், அமேசான் நிறுவனம், தனது விற்பனையாளர்கள் செய்யும் மோசடிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்துள்ளது.