அனைத்து கல்வி நிலையங்களும் 31வரை மூடல்!

கோவிட் 19 காய்ச்சல் தொற்று பாதிப்பு தொடர்பாக மைய அரசின் நலவாழ்வுத் துறை அமைச்சர் அர்சவர்தன் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.


அதில் வரும் 31ஆம் தேதிவரை நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடுவதென முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன.

உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல்குளங்கள், நிகழ்ச்சி அரங்குகள், திரையரங்குகள் ஆகியவையும் மூடப்படவேண்டும். விளையாட்டுப் போட்டிகள், உள்ளூர்த் திருவிழாக்களையும் நிறுத்திவைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருவது தடைசெய்யப்படுகிறது.

அமீரகம், கத்தார், குவைத், ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தும் பங்கேற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நலவாழ்வுத் துறை அமைச்சர் இத்தகவல்களைத் தெரிவித்தார்.