மூன்று நாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், திசை மாறிய அஜித் பவார் ராஜினாமா! மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு திருப்பம்!

மஹாராஷ்டிராவின் முதல்வராக ஃபட்நாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்ற நிலையில், தற்போது தங்களது பதவிகளை இருவரும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனாவுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றதை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதனையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவுடன் பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

இதற்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேலும் அஜித் பவார் தனது கட்சியிலிருந்து நீக்கப்ப்பட்டார். மேலும் ஃபட்நாவிஸின் வெற்றியை தொடர்ந்து வழக்கு கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை உச்சநீதிமன்றம், நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது முதல்வர் ஃபட்நாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை ஃபட்நாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் திடீர் திருப்பமாக இருவரும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை இல்லாததால் தான் இருவரும் ராஜினாமா செய்தனர் எனவும் கூறப்படுகிறது.