திமுகவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் பிரச்சாரம்! பதிலடியாக அஜித் ரசிகர்களை களம் இறக்கிய அதிமுக! மதுரை டென்சன்!

தன்னுடைய ரசிகர்கள் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு ஆதரவாக நிற்பதைப் பார்த்ததுமே, மன்றத்தைக் கலைத்துவிட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் அஜித் ரசிகர்கள் பல நகரங்களிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.


குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கோவை போன்ற பகுதிகளில் அஜித் ரசிகர்களை வளைத்துப்பிடித்திருக்கும் அ.தி.மு.க.வினர் தக்க மரியாதை கொடுத்து, தங்களுடனே பிரசாரத்துக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்த நிகழ்வைப் பார்த்து இப்போது விஜய் ரசிகர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஆம், ஏற்கெனவே சர்கார் பட விவகாரத்தில் அ.தி.மு.க.வினர் கொஞ்சம் அதிகமாகவே வேகம் காட்டினார்கள். மதுரையில் சர்கார் படம் திரையிட்ட தியேட்டர்களில் திரையைக் கிழித்தார்கள். கட் அவுட், பேனர்களை உடைத்துப் போட்டார்கள்.

அதனால், அப்போதிருந்தே அ.தி.முக.வினர் மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்துவந்தனர். இந்த நிலையில் திரையைக் கிழித்து வீராவேசம் காட்டிய ராஜன் செல்லப்பாவின் மகனுக்காகத்தான் அஜித் ரசிகர்கள் பிரசாரம் செய்துவருகிறார்கள். அதைக் கண்டு டென்ஷனாகியே விஜய் ரசிகர்கள் களம் இறங்கிவிட்டார்கள்.

அவர்கள் விஜய் மன்றக் கொடியுடன் களம் இறங்கியதால்தான், யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜய் வெளிப்படையாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டதாம். ஆனால், ரசிகர்கள் அவர்கள் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று விஜய் கடைக்கண் காட்டிவிட்டதாகவே சொல்கிறார்கள்.

அதனால் மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும், எதிராக விஜய் ரசிகர்களும் களம் இறங்கி புகுந்து விளையாடுகிறார்கள். இந்தப் போட்டியில்ஜெயிக்கப் போறது தலயா, தளபதியான்னு பாத்துடலாம்…