அறிமுக டெஸ்ட்டில் 267 ரன்கள் விளாசல் ! 24 ஆண்டு கால சாதனையை தகர்த்த இந்திய வீரர்!

அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 267 ரன்கள் குவித்து இந்திய வீரர் மகத்தான சாதனை புரிந்துள்ளார்.


   ரஞ்சி கோப்பைக்கான எலைட் பி குரூப்பில் இடம்பெற்றுள்ள மத்திய பிரதேசம் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஐதராபாத் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து களம் இறங்கிய மத்திய பிரதேச வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். அதிலும் அறிமுக வீரரான அஜய் ரொஹேரா களம் இறங்கியது முதலே கெத்து காட்டினார்.



   ஐதராபாத் பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை வேகமாக குவித்தார். இறுதியில் 345 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அஜய், 267 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ரஞ்சி போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற மகத்தான சாதனையை அஜய் படைத்துள்ளார்.

   இதற்கு முன்னர் மும்பை வீரர் அமல் மஜூம்தார், ஹரியானாவிற்கு எதிராக 260 ரன்கள் குவித்ததே அறிமுக வீரர் ஒருவர் எடுத்த அதிக ரன்னாக இருந்தது. 1994ம் ஆண்டு படைக்கப்பட்ட இந்த சாதனையை 24 வருடங்களுக்கு பிறகு அஜய் ரொஹரோ தகர்த்துள்ளார். மேலும் 2வது இன்னிங்சில் ஐதராபாத் 124 ரன்களில் சுருண்டதால், மத்திய பிரதேச அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 253 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



   இதனிடையே ரஞ்சி போட்டிகளில் அறிமுக வீரராக அதிக ரன்கள் எடுத்த சாதனை படைத்துள்ளது தெரியாமலேயே அஜய் விளையாடி வந்துள்ளார். அவர் பெவிலியன் திரும்பிய பிறகே தான் படைத்த சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.