ஜியோவுக்கு ஆப்பு வைக்க புதிய டேட்டா பிளான்! மீண்டும் களம் இறங்கும் ஏர்டெல்!

கொல்கத்தா: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை விஞ்சும் நோக்கில் ஏர்டெல் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.


இதன்படி, ஜூன் காலாண்டு முடிவில், இந்திய  தொலைத்தொடர்பு நிறுவனங்களில், 2வது இடம் பிடிக்க, பாரதி ஏர்டெல் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தனது டிஜிட்டல் சேவை செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வருமானமும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக, ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 17 ஆண்டுகளாக, இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமாக வலம்வந்த ஏர்டெல், வோடஃபோன் ஐடியா செல்லுலர் இணைப்பு காரணமாக, 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது, ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சியால், ஏர்டெல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவு வருமானம் வெகுவாக சரிவடைந்திருந்தது. இந்நிலையில், இது தற்போதைய ஜூன் காலாண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக,நிறுவனம் உறுதிபட தெரிவிக்கிறது.   

தனது டேட்டா சேவையில் புதிய மாற்றங்கள் செய்துள்ளதோடு, சேவைக் குறைபாடுகளை போட்டி நிறுவனங்களுக்கு ஏற்ப சரிசெய்து வருவதால், தனது வர்த்தகம் மீண்டும் ஏற்றத்திற்கு வந்துள்ளதாக, ஏர்டெல் குறிப்பிடுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையான வருமான விவரம் வெளியிடப்படும்போது இதனை பலரும் உணர்வார்கள் என்றும், ஏர்டெல் சுட்டிக்காட்டியுள்ளது. 

வாடிக்கையாளர்களை ஈர்க்க டேட்டா கட்டணத்தை குறைப்பதுடன் புதிய சலுகைகளையும் அளிக்க ஏர்டெல் திட்டமிட்டு வருகிறது. இதன் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று ஏர்டெல் கூறியுள்ளது.