ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி மாதம் கட்டாயம் இந்த தொகைக்கு ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டும்..! எவ்வளவு தெரியுமா?

டெல்லி: ரீசார்ஜ் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஏர்டெல் நிறுவனம் பற்றி அதன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


ஜியோ நிறுவனத்தின் வருகையால் இந்திய அளவில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பலவித கவர்ச்சிகரமான சலுகைகளை ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைப்போம் என்ற மனநிலையை கடந்து, தற்போது லைஃப் டைம் ஃப்ரீ சிம் கார்டு என்பதை மாற்றி, மாதந்தோறும் சிம் பயனாளர்கள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே வேலிடிட்டி தரப்படும் என்ற புதிய விதிமுறையை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன.

இதனால், மாதந்தோறும் ஏதேனும் ஒரு ரீசார்ஜ் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   இதில், ஏர்டெல் நிறுவனம் அடிக்கடி ரீசார்ஜ் சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், டிசம்பர் 29ம் தேதி புதிய விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது.

இதன்படி, ஏர்டெல் பயனாளர்களுக்கு கிடைத்து வந்த ரூ.35 ரீசார்ஜ் பேக், இனி ரூ.49 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, ஒவ்வொரு ஏர்டெல் சிம் பயன்பாட்டாளரும் செய்ய வேண்டிய அடிப்படை ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.35 என்பதில் இருந்து, ரூ.45 ஆக உயர்த்தியுள்ளனர். மற்ற ரீசார்ஜ் கட்டணங்களின் விலையையும் பன்மடங்கு ஏர்டெல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு மாதம் முன்பாகத்தான் ஏர்டெல் சேவைக்கட்டணம் அதிகரித்து, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய விலை உயர்வை அந்நிறுவனம் செயல்படுத்தியுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தக லாபம் என்பதை கடந்து வர்த்தக கொள்ளை என்ற நிலைக்கு ஏர்டெல் செல்ல தொடங்கியுள்ளதாக, அவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.