அதிமுகவிடம் உள்ள மொத்த நிதி எவ்வளவு! பொதுக்குழுவில் வாயை பிளக்க வைத்த ஓபிஎஸ்!

இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க .செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.


அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்த பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிதி ரூ.226 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் உள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல், தேர்தல் நிதியாக ரூ.46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்ப்பு மூலம் ரூ.1.9 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு. இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.

அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி. பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு பாராட்டு. காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.