மீண்டும் சேகர் ரெட்டி வந்தாச்சு! திருப்பதி ஏழுமலை வெங்கடேசன் மகிமையா அல்லது எடப்பாடியார் கருணையா?

புத்தம்புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு நாட்டு மக்கள் எல்லாம் நாயாய்பேயாய் அலைந்துகொண்டு இருந்தபோது, கத்தைகத்தையாக பதுக்கிவைத்து பிடிபட்டவர் சேகர் ரெட்டி.


ஏற்கெனவே மணல் விவகாரத்தில் கொடிகட்ட பறந்த சேகர் ரெட்டியின் நிலைமை அம்புட்டுத்தான் என்று பேசப்பட்டது. ஆனால், அவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் ஒவ்வொன்றாக வலுவிழந்து போயின. இதையடுத்து ஒரே விமானத்தில் சேகர் ரெட்டியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக பரபரப்பு கிளம்பியது. அப்போதே சேகர் ரெட்டிக்கு மீண்டும் எல்லா பவரும் வந்துவிட்டதாக பேசிக்கொண்டனர்.

அன்று பேசிக்கொண்ட விவகாரம் இப்போது உண்மை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஆம், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு ஆந்திர அரசு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளது. அந்த குழுவில் அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளராக இடம் பிடித்துள்ளார் சேகர் ரெட்டி.

இவர் ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் தேவஸ்தான குழுவின் உறுப்பினராக இருந்தவர். அப்போதைய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சேகர் ரெட்டி. 

வழக்கமாக அண்டை மாநில முதல்வர்களிடம் தங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், ஜெயலலிதா தனது செயலாளர்கள் மூலமாகத்தான் தகவல் தெரிவிப்பார். ஆனால், சேகர் ரெட்டிக்காக ஜெயலலிதாவே நேரடியாக சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்படி கேட்டுக்கொண்டார் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சேகர் ரெட்டி நியமனத்திற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியை சமாதானம் செய்து அவரே உள்ளே நுழைந்தாரா அல்லது எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு மூலம் இடம் பிடித்தாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.